போதையில் தினமும் அடித்து துன்புறுத்திய கணவனின் கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளி கொலை செய்த மனைவி, போலீசில் சரணடைந்தார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி இந்திரா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (42). நுகர்பொருள் வாணிப கழக குடோனில் லோடுமேனாக வேலை
செய்து வந்தார். தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் ராமகிருஷ்ணன், மனைவி தமிழரசியை (40) அடித்து உதைப்பாராம். அக்கம் பக்கத்தினர் வந்து கண்டித்தால் அவர்களிடமும் தகராறு செய்வாராம். இதனால் அந்த பகுதி மக்கள் யாரும் அவரை கண்டுகொள்வதில்லை.
கணவனின் டார்ச்சர் குறித்து உறவினர்களிடம் கூறி அழுதார் தமிழரசி. அவர்கள் அறிவுரை சொல்லியும் ராமகிருஷ்ணன் திருந்தவில்லை.
இந்நிலையில், நேற்றிரவும் போதையில் வந்த அவர், கச்சேரியை தொடங்கினார். விரக்தி அடைந்த தமிழரசி, போதையில் இருந்த கணவனை பிடித்து தள்ளினார். கீழே விழுந்ததும் அவரது கை, கால்களை கட்டினார். சேலையால் முகத்தையும் சுற்றினார். பின்னர் தரதரவென இழுத்துச் சென்று வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் தள்ளிவிட்டார்.
இன்று காலை கிணற்றில் கணவன் சடலம் மிதப்பதை பார்த்த தமிழரசி கதறி அழுதார். ‘கணவனை அநியாயமாக நானே கொன்று விட்டேனே’ என அவர் கதறியதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் பேராவூரணி போலீஸ் நிலையத்துக்கு சென்ற தமிழரசி, நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ராமகிருஷ்ணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
0 கருத்து:
கருத்துரையிடுக