புது முகங்கள்! புதுத் தொடர்புகள்! புதுவித கலாசாரம் …. இன்று யாழ்ப்பாணத்தில் ஊடுருவத் தொடங்கியுள்ளதை யாரும் மறுக்க முடியாது.
தமிழர்கள் தமது பாரம்பரியம், கலாசாரம் என கட்டுண்டு கிடந்த யாழ்ப்பாணத்தில், இன்றைய காலத்தில் தமிழர்களின் பண்பாட்டு மரபை வேரறுக்கவல்ல பாலியல் துர்நடத்தைகள் அரங்கேறி வருகின்றமை தொடர்பில் பல தரப்பட்டோ் தமது கவலையையும் மன ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
யாருக்கும் தெரியாமல் முளைவிட்டு எமது தமிழ்ச் சமூகத்தின் ஆணிவேரையே அசைக்க முற்பட்டுக் கொண்டிருக்கும் புதியதொரு பிரச்சினையாக கலாசாரச் சீர்கேடு மாறியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெண்கள் வரை பொது இடங்கள், பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக கல்விக் கூடங்கள், வேலைத் தளங்கள், பேரூந்துக்கள் என எல்லா இடங்களிலும் பாலியல் சுரண்டலுக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
கடந்த ஆறுமாத காலப்பகுதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 62 சிறார்கள் வன்முறைகள் மற்றும் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகியிருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இவற்றில் சிறுவர்கள் பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களுக்கு உள்ளான சம்பவங்கள் 22 என கணிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலைத் தரவுகளின் படி முதல் 7 மாத காலப்பகுதிகளில் 81 பாலியல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எது எவ்வாறிருப்பினும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைப் பொறுத்தவரையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான மீதான பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வடமாகாணம் இருந்தவேளை எவ்வாறு பெண்களும் ஆண்களும் இருந்தார்கள் என்பதை மறக்க முடியாது. ஏனெனில் இவ்வாறான சம்பவங்கள் ஏதும் நடந்தால் அதற்கு விடுதலைப் புலிகளால் அளிக்கப்படும் தண்டனை பற்றி அப்பகுதி மக்கள் நன்றாகவே உணர்ந்திருந்தார்கள்.
ஆனால் யுத்தம் நிறைவுற்று மூன்றாண்டுகள் கழிந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சொல்லில் வடித்திட முடியாது. நான் அபிவிருத்தியைக் குறிப்பிடவில்லை. தமிழர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள நடத்தைப் பிறழ்வுகளையே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முப்பது வருடகாலத்தில் தமிழர்களின் கலாசாரம் பாதுகாக்கப்பட்டது. காரணம் பெண்களைப் பொறுத்தவரை அறிமுகமில்லாத இளைஞர்களோடு சுற்றித்திரிவதோ அல்லது ஆண்கள் பெண்களோடு சேஷ்டை செய்வதே குறைவு. இல்லை என்றே சொல்லலாம்.
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் எப்போது நேரடியாகத் தரைவழிப் போக்குரவத்து இடம்பெறத் தொடங்கியதோ அன்றிலிருந்து இவ்வாறான சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தாலும், முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லையெனக் கருதி கலாசார சீரழிவுகள் அதிகரித்து அரங்கேறத் தொடங்கியுள்ளன.
தென்னிலங்கைக் கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணத்தவரையும் தழுவத் தொடங்கிவிட்டது எனலாம். தற்போது அது வளர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தென்னிலங்கையர்களின் வருகையோடு விபச்சாரத்தை தொழிலாக செய்யும் பாலியல் தொழிலாளர்களின் வருகை யாழில் அதிகரித்துள்ளமையை நாம் வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது.
அன்று விமானம் மூலமே கொழும்புக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதுவும் சிலகாலம் தான். அவசர தேவையின் நிமித்தம் அதிகளவான பணத்தினைக் கொடுத்து விமானம் மூலம் கொழும்புக்கு சென்று வந்தார்கள். அதற்கு அனுமதி பெறவேண்டுமாயின் பல நாட்கள் செலவிட வேண்டியிருந்தது.
அத்துடன் கொழும்பில் தமிழர்களுக்கெதிராக அதிகளவான கெடுபிடிகள் காணப்பட்டதனாலும் தென்னிலங்கைக்கு வரும் யாழ் சமூகத்தினர் குறைவு என்றே கூறலாம். ஆனால் இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது எனலாம்.
யாழில் தெருவுக்கு ஒரு கடை. இல்லாவிட்டால் டவுனுக்குப் போய் சாமான்கள் வாங்கிய காலம் போய் இருந்த இடத்திலேயே, அதாவது சிங்கள, முஸ்லிம், இந்திய நடைபாதை வியாபாரிகள் யாழுக்குச் சென்று வீதியில் கூவி விற்பதனால், பொருட்களை கொள்வனவு செய்யும் காலம் வந்துவிட்டது.
மாற்றங்கள் வேண்டும் தான். எப்போதும் ஒரே மாதிரி இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. அந்த மாற்றமே எமது தமிழ்ச் சமூகத்தின் சீரழிவுகளுக்குக் காரணமாகிவிட்டால் அதனால் ஏற்படும் துன்பங்களுக்கு கண்ணீர் விட்டு என்ன பயன்?
இன்னுமொரு விடயத்தை இங்கு கட்டாயமாகக் கூறவேண்டும். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் துரித கதியில் அபிவிருத்தி அடைந்து வரும் எயிட்ஸ் நோயாகும். இது வரையில் யாழில் மட்டும் 43 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 23பேர் இறந்துள்ளதாகவும் அவர்களுள் அதிகமானோர் பாடசாலை மாணவிகள் என யாழ். சுகாதாரப் பணிப்பாளர் கடந்த வருடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் இவ் எண்ணிக்கை அதிகரித்திருக்குமென்பதே என் யூகம்.
யாழில் இடம்பெற்றுவரும் பாலியல் துஸ்பிரயோகங்கள், விபச்சாரம் என்பன மேலும் மேலும் அதிகரிக்குமாயின் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்த முடியாமலே போய் விடும் என்பது வேதனைக்குரிய விடயம்.
இராணுவத்தைக் கண்டு அஞ்சிய காலம் போய் இராணுவத்தினருடன் பொலிஸாருடனும் தொலைபேசியில் இரகசியமாக உரையாடும் அளவிற்கு யாழ் மக்கள் முன்னேறிவிட்டார்கள் என்றெ சொல்லாம். அது மட்டுமின்றி அவர்களுடன் தகாத உறவுகளைப் பேணி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. நான் இங்கு யாழ் மக்களை குறை சொல்கிறென் என்று என்மீது பலர் கோபப்படலாம். நம் சமூதாயம் திருந்த வேண்டும், நம் கலாசாரம் கட்டிப் பாதுகாக்க வேண்டும் என்பதனாலேயே இவ்வாறு சொல்லிக் கொள்கின்றேன்.
ஆனால் இவ்வாறு கோபப்படுவதாலும் திட்டுவதாலும் இவ்வாறான சம்பவங்கள் நின்று விடப்போவதுமில்லை.
இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளில் அக்கறை கொள்வதில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பிள்ளைகள் ௭ங்கு செல்கிறார்கள் ௭ன்பது தொடர்பில் ௭துவும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். சமையலும், தொலைக்காட்சியுமாக தம் பொழுதைக் கழிக்கின்றார்கள். பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என கரிசனம் கொள்ளாமல் இருக்கின்றனர்.
அன்று, பாடசாலை மாணவ, மாணவிகள் 6 மணிக்கு ரியூசன் படிப்பை எல்லாம் முடித்து வீட்டுக்கு வந்தனர், ஆனால் இன்றைய யாழில் இரவு நேர வகுப்புக்கள் என்ற போர்வையில் மாணவர்களை தகாத வழியில் செல்ல வைப்பதாக பெற்றோர் சிலர் விசனப்பட்டமையும் யாவரும் அறிந்ததே.
இளவயது கர்ப்பம், சட்டவிரோத கருக்கலைப்பு, வீட்டை விட்டு வெளியேறுதல், வயதுக்கு மீறிய காதல் போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறத் தொடங்கி விட்டது. அதுமட்டுமின்றி தற்போது யாழ்ப்பாணத்தில் ஊடுருவத் தொடங்கியுள்ள மற்றுமொரு சம்பவத்தை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.
எங்கு பார்த்தாலும் யார் கையைப் பார்த்தாலும் செல்போன் சுழன்று கொண்டே இருக்கும். செல்போன் கலாசாரமும் தமிழர்களைக் குறிவைத்துள்ள பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு காரணம் என்றும் சொல்லலாம்.
அது மட்டுமன்றி எங்கு பார்த்தாலும் ’’இன்ரநெற் செண்டர்’’. குறைந்த கட்டணத்தில் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பினும் இதுவும் ஒருவகை கலாச்சார சீரழிவுக்கு காரணமாக இருக்கின்றது என்பதனை யாராலும் மறுக்க முடியாது. அபிவிருத்தி, வடக்கின் வசந்தம் என இலங்கை அரசு செய்துள்ள அபிவிருத்தியானது கையடக்க தொலைபேசிகளிலும் இணைய வசதிகளை வரவைத்துள்ளது. அதிலும் சில இளைஞர்கள் ஆபாச காட்சிகளைப் பார்ப்பதும் என மிகவும் மோசமடைந்து வந்துகொண்டிருக்கின்றது யாழ் சமுதாயம்.
இதனால், ஏனைய நாடுகளில் ஃபேஸ்புக் காரணமாக அதிகரித்துவரும் பிரச்சினைகள் போன்று, யாழில் வெகு சீக்கிரத்தில் தொற்றிக்கொள்ளும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை
இளைஞர்கள் சிலரின் இன்றைய பொழுதுபோக்கு, ஏதாவது சில நம்பர்களை டயல் செய்து, மறுமுனையில் பெண்ணின் குரல் கேட்டதும் அவர்களிடம் பேச்சைக் கொடுத்து வாழ்க்கையைக் கெடுக்கும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளன. அது பாடசாலை மாணவியோ, திருமணமான பெண்ணோ அல்லது விதவையோ யுவதியாகவோ இருக்கலாம். இவர்களும் அவர்களின் பேச்சில் உருகி தம்மைப் பறிகொடுப்பதுடன் உடமைகளையும் இழக்கின்றனர்.
இளம் பெண்களே இவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போனில் பேசிய சில நாட்களிலேயே தெரியாத ஒருவரைச் சந்திக்கச் சென்று விடுகின்றனர். பெற்றோர்களுக்குத் தெரியாமலே இப்படலம் தொடர்கின்றது.
இது மட்டுமன்றி, மனைவி இருக்க, கணவன் இன்னொரு பெண்ணிடம் நாடுவதும், இருமணம் செய்வதும் பெருகி வருகின்றது.
அன்று திரையரங்குகளில் திரைப்படம் பார்த்தாலும், இன்று போல தென்னிந்திய ரசிகர்கள் போன்று ஒரு படம் வெளியானதும், பெரிய கட் அவுட் அடிச்சு தேங்காய் உடைத்து பாலாபிஷேகம் செய்ததில்லை யாழ் சமூகம். ஆனால் இன்று இதுவும் ஒரு காலாச்சார சீரழவு என்றே கருதலாம்.
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை ஆட்சி செய்த காலத்தில் சினிமா படங்கள் பார்ப்பதையே தவிர்த்தது. இருப்பினும் சிலர் தெரியாமல் வீட்டுக்குள் போட்டு பார்த்த காலமும் இருப்பினும் இவ்வாறு இன்றைய இளைஞர்கள் போன்று அட்டகாசம் செய்ததில்லை.
எப்போது விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டார்களோ அன்றிலிருந்து அகன்று பரந்து விரிந்த எமது தமிழ்ச் சமுதாயத்தின் ஆணிவேரை ஏதோவொரு பிரச்சினைகள் அரித்துக்கொண்டுதான் இருக்கும் என்பது நிதர்சனம்.