புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நடிகர்கள்: சந்தோஷ், மணீஷா யாதவ், ஜெயப்பிரகாஷ், துளசி, பூர்ணிமா பாக்யராஜ்


ஒளிப்பதிவு: ஏஆர் சூர்யா இசை: யுவன் சங்கர் ராஜா

தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின்

எழுத்து - இயக்கம்: சுசீந்திரன்

கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கும் சந்தோஷுக்கும் மனீஷாவுக்கும் காதல். மிடில் க்ளாசுக்கும் கொஞ்சம் மேம்பட்ட பெற்றவர்களை ஏமாற்றிவிட்டு, ஏக பொய் சொல்லி அந்தக் காதலை வளர்க்கிறார்கள். ஒரு நாள் மாமல்லபுரத்தில் ரூம் போட்டு எல்லை மீறுகிறார்கள். கர்ப்பமாகிறார் மனீஷா. பெற்றவர்களுக்குத் தெரியாமல் கருவைக் கலைக்க முயல, மாட்டிக் கொள்கிறார்கள். இருதரப்பு பெற்றோருக்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது. பெண் தரப்பு எப்படியாவது திருமணம் நடத்தி மானத்தைக் காத்துக் கொள்ளப் போராடுகிறது. பையன் தரப்போ எதையாவது சாக்குப்போக்குச் சொல்லி இந்தக் காதலை வெட்டிவிடப் பார்க்கிறது. கடைசியில் கருவைக் கலைத்தால் திருமணம் என்பதை நிபந்தனையாக வைக்கிறார்கள் பையன் வீட்டார். ஆனால் பெண் தரப்பில் மறுக்கிறார்கள்.

இந்தக் காதலின் முடிவு என்ன என்பதை நிச்சயம் திரையில் பாருங்கள். நாட்டு நடப்பைப் பார்த்து டைமிங்காக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் சுசீந்திரன். நான்கு வரிக் கதை. வெகு சாதாரண சம்பவங்கள்தான். ஆனால் மனம் பதறுகிறது. அதுவும் அந்த க்ளைமாக்ஸும் யுவனின் பாடலும் மனசை அறுக்கிறது.

யாரப்பா அந்த குழந்தை... கண்ணிலேயே நிற்கிறது இன்னும்! படத்தின் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு விஷயம், சொல்ல நினைத்ததை ஜவ்வாய் இழுத்துக் கொண்டிருக்காமல் சுருக்கென்று சொல்லி முடித்தது. கதாநாயகன் சந்தோஷ் பற்றி விசேஷமாய் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் அந்தப் பையனை ஆரம்பத்தில் வழக்கமான விடலைக் காதலனாகக் காட்டி, காட்சிகள் நகர நகர க்ளைமாக்ஸ் நெருங்கும்போது வில்லக் காதலனாக மனதில் பதிய வைக்கிறார் பாருங்கள்... அங்கே நிற்கிறார் சுசீந்திரன்! நாயகி மனீஷா... பெரிய உதடுகள், பெரிய பெரிய கண்கள்...என ஆரம்பத்தில் கொஞ்சம் உறுத்தல்.

ஆனால் அதுவே போகப் போக அவருக்குப் ப்ளஸ்ஸாகிவிடுகிறது. கர்ப்பத்தை அம்மாவுக்குத் தெரியாமல் மறைக்க அவர் போராடும் காட்சிகள் அசல்... அசத்தல்! அந்தக் கர்ப்பத்தைக் கண்டுபிடிக்கும் காட்சியிலும், எல்லா வகையிலும் தங்களை ஏமாற்றிவிட்ட பையனின் வீட்டாரிடம் சண்டை போடும் காட்சியிலும் துளசியின் கோபமும் கண்ணீரும் பெண்ணைப் பெற்ற அத்தனை பேர் கண்களையும் குளமாக்குவது நிஜம்.

பெண் காதலித்து கர்ப்பமாகி நிற்கிறாள். பையன் வீட்டாரிடம் சமரசமாகப் போவதா, போலீசுக்குப் போவதா, நீதிமன்றமா... ஒன்றும் புரியாமல் தடுமாறும் ஜெயப்பிரகாஷ், ஒரு கட்டத்தில் கெட்டுப் போன தன் பெண்ணுக்கு பையன் வீட்டார் விலை பேசும்போது, அவமானமும் துக்கமும் தாளாமல் முகத்தைப் பொத்திக் கொண்டு வெளியில் ஓடும்போது, ஒரு தந்தையின் மனசில் விழுந்த அடியின் வலி புரிகிறது. அர்ஜூன், மனீஷாவின் தோழியாக வரும் அந்தப் பெண், சந்தோஷின் தந்தையாக வருபவர், அப்புறம் பூர்ணிமா... எல்லோருமே அளவாக நடித்திருக்கிறார்கள்.

ஆனால் அதற்காக இதுதான் காதல் என்பதை ஏற்க முடியாது. இப்படியும் காதலிக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்ல முடியுமே தவிர, காதலித்தாலே இதுதான் கதி என்ற பொதுக் கருத்தை இந்தப் படம் உருவாக்கும் ஆபத்துமிருக்கிறது. உண்மையான காதல், எதிர்ப்பார்ப்புகள் அற்றது, உடல் சுகம் பார்த்ததும் அலுத்துப் போகாதது, பெற்றோர்களின் பேரங்களை எதிர்ப்பார்க்காதது, எதற்காகவும் காத்திருக்காதது. காதலின் எதிர் விளைவுகளைச் சொன்ன சுசீந்திரன் இதையும் கொஞ்சம் மனசில் தைக்கும்படி பதிவு செய்திருக்கலாம்.

காதலின் பெயரில் காதலுக்கு எதிராக வந்திருக்கிற படம்தான்.... ஆனால் இதையும் பார்ப்பீர் காதலர்களே! 
 
Top