மதுரையில் நடைபெற்ற 'வேலாயுதம்' பாடல் வெளியீட்டு விழாவை முன்வைத்து சிலர் முடிந்து போன விஷயத்தை விஷமாக்க முயற்சி செய்வதாக நடிகர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரையில் சமீபத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணி விழாவும், 'வேலாயுதம்' பாடல் வெளியீட்டு விழாவும் நடந்தது. அப்போது எனது ரசிகர்களில் சிலர் என் மீதுள்ள அன்பின் மிகுதியால் என்னை கடவுளாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதனைக் கண்டவுடன் அவர்களை அழைத்து இது போன்று போஸ்டர்கள் ஒட்டக் கூடாது, அதனை உடனே அகற்ற உத்தரவிட்டேன். அதை ஏற்று உடனே அவர்கள் அகற்றிவிட்டனர். மேலும், இனி வரும் காலத்தில் இது போன்று செய்ய மாட்டோம் என்றும் உறுதி கூறினர். ஆனால் முடிந்து போன இந்த விஷயத்தை விஷமாக்க சிலர் முயல்கிறார்கள். நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம், இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, எங்களை பிரிக்கவோ பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது. நான் ஜாதி, மத, இனத்திற்கு அப்பாற்பட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவன். மதுரை விழாவில் கறவை மாடுகள், கம்ப்யூட்டர்கள், தையல் மிஷின்கள் வழங்கப்பட்டு, மூன்று மாணவர்களின் முழு படிப்புக்கு உதவித் தொகையும் வழங்கினேன். தவிர, நான் ஆயிரம் பேரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் என்ன ஜாதி, என்ன மதம் என்பது எனக்கு தெரியாது. என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் என்ன ஜாதி, மதம் என்பதும் எனக்கு தெரியாது. எனக்கு இலட்சக்கணக்கக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன ஜாதி, மதம் என்பதும் தெரியாது. ஆயிரக்கணக்கில் நற்பணி இயக்க, மக்கள் இயக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். அவர்களும் என்ன ஜாதி, மதம் என்பது தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம், தமிழ், தமிழினம் ஒன்றேதான். ஒரு மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படி ஆர்வம் மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனி வருங்காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு போஸ்டர்களோ, செய்திகளோ வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்
0 கருத்து:
கருத்துரையிடுக