புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


 விநாயகப்பெருமான் தெய்வங்களில் முதல்வராக விளங்குகிறார். இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர். எந்த சுபவிஷயத்தை செய்யத் தொடங்கினாலும், பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு,""அப்பனே! விநாயகனே! தொடங்கும் செயல் தடையேதும் இல்லாமல் இனிதே நிறைவேற்றி அருள்வாய்!'' என்று வணங்கிவிட்டே செயல்படுவர்.
எழுதத் தொடங்கினாலும், "பிள்ளையார்சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு' என்று குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள் வழிகாட்டுவர்.
 விநாயகரும் சிறந்த எழுத்தாளராகப் பணியாற்றி இருக்கிறார். தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர். சதுர்த்தி நாளில் வணங்குவோருக்கு விநாயகப் பெருமானின் அருளால் செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும். வல்லமை உள்ள தெய்வம் நீ தானய்யா....: விநாயகர் சதுர்த்தியான இன்று விநாயகரைப் போற்றி வழிபடுவதற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத்தின் பொருளைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இதை விநாயகரின் முன் பக்தியோடு சொல்லி வழிபடுவோருக்கு தொடங்கும் செயல்கள் யாவும் இனிதே நிறைவேறும்.
தனக்கு மேல் வேறு ஒரு தலைவன் இல்லை என்ற ஒப்பற்ற தனிப் பெருந்தலைவனே! கஜமுகாசுரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துபவனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவனே! உயிர்களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன்னை நம்பும் அடியவர்களின் தீவினை களைப் போக்கி கருணை காட்டும் கணபதியே! உம்மை வணங்குகிறேன். தேவாதிதேவனே! பாமரர்களின் அறியாமையைப் போக்குபவனே! வல்லமை நிறைந்தவனே! ஆனைமுகனே! கருணை மிக்க இதயம் கொண்டவனே! அப்பாலுக்கும் அப்பாலாய் வீற்றிருக்கும் பரம்பொருளே! எப்போதும் உன் திருவடியை சரணடைந்து வழிபடும் பாக்கியத்தை அருள்வாயாக.ஓங்கார வடிவினனே! கருணாமூர்த்தியே! பொறுமை, மகிழ்ச்சி, புகழ் மிக்கவனே! எல்லா உயிர்களும் மகிழும்படி நன்மை அருள்பவனே! பணியும் அன்பர்களின் பிழை பொறுப்பவனே! அடியார் வேண்டும் வரம் தந்தருள்பவனே! நித்ய வடிவினே! உன்னை வணங்குகிறேன். கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகப் பெருமானே! சிரிப்பாலே திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமானின் புதல்வனே! பக்தர்களின் துயர் களைபவனே! ஊழிக் காலத்தில் உலகத்தைக் காத்தருள்பவனே! செய்யும் செயல்களின் வெற்றிக்குத் துணைநிற்கும் ஆதிபரம்பொருளே! உன்னை சரணடைந்து போற்றுகின்றேன். ஒற்றைக் கொம்பனே! கணபதீஸ்வரா! சிவ பெருமானின் பிள்ளையே! ஆதிஅந்தமில்லாதவனே! துன்பம் துடைப்பவனே! யோகியர் உள்ளத்தில் குடிகொண்டவனே! உன் திருவடிகளை எப்போதும் திருவடியில் வைத்து சிரம் தாழ்த்தி வணங்கும் இச்சிறியேனையும் காத்தருள்வாயாக!விநாயகப்பெருமானின் இத்துதியை அதிகாலையில் பாராயணம் செய்வோருக்கு நோய்நொடிகள் அனைத்தும் விலகும். தோஷம் யாவும் நீங்கும். வாழ்வில் உண்டாகும் துன்பம், தொல்லை யாவும் அடியோடு அகலும். குலம் தழைக்க மழலைச் செல்வம் கிடைக்கும். நற்புகழும், மேம்பாடும் உண்டாகும். அஷ்டமாசித்திகள் கைகூடும். எனவே, அந்த விக்ன விநாயகப்பெருமானை வழிபடுவோமாக.தந்தையின் பெயரில் தனயன் : "அப்பாவின் பெயரைக் காப்பாற்று' என பிள்ளைகளுக்கு பெரியவர்கள் புத்திமதி சொல்வது வழக்கம். இங்கோ, தந்தையின் பெயரிலேயே விநாயகர் ஒருவர் இருப்பது தெரியுமா? அப்பாவின் பெயரான கும்பேஸ்வரரை தனது பெயராகக் கொண்ட விநாயகர் நாகப்பட்டினம் மாவட்டம் செண்பகபுரத்தில் அருள்கிறார்.
தல வரலாறு: ஒருசமயம் கைலாயம் சென்ற நாரதர், பார்வதியிடம் ஒரு கனியை கொடுத்தார். அதை முருகனுக்கு தருவதா விநாயகருக்கு தருவதா என குழப்பம் ஏற்பட்டது. உலகத்தை முதலில் சுற்றி வருபவருக்கு கனியை தருவதாக கூறினார் சிவன். முருகன் மயிலில் உலகத்தை சுற்ற கிளம்பினார். விநாயகரோ, பெற்றோரை சுற்றி வந்து கனியை வாங்கிக் கொண்டார். கோபம் கொண்ட முருகன், அம்பிகை தடுத்தும் கேட்காமல் பழநி சென்றார். தன்னால் தம்பி, பிரிந்து சென்றதை எண்ணிய வருந்திய விநாயகர், தனக்கு விட்டுக் கொடுக்கும் பக்குவம் இல்லாமல் போனதை எண்ணி கலங்கினார். பூலோகத்தில் தவமிருந்து, மன அமைதி பெற அனுமதிக்கும்படி பெற்றோரிடம் வேண்டினார். செண்பக மரங்கள் நிறைந்த இத்தலத்தில் தவம் இருக்கும்படி சிவன் கூறினார். அதன்படி இத்தலம் வந்த விநாயகர், தவமிருந்தார்.
 விநாயகர் முழுமுதற்கடவுள் என்றாலும், அவரும் தாய்க்கு பிள்ளை அல்லவா! வனத்தில் தனியே தவமிருக்கும் தன் மகனுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று சிவனிடம் வேண்டினாள் பார்வதி. எனவே, சிவபெருமான் இத்தலம் வந்து விநாயகரை சுற்றிலும் ஐந்து இடங்களில் பஞ்சபூத வடிவில் பாதுகாப்பாக தங்கினார். தவமிருந்த விநாயகரே இங்கே எழுந்தருளியுள்ளார். அப்பாவின் பெயர்: சிவனில் இருந்து தோன்றியதால் முருகனை சிவ அம்சம் என்றும், அம்பிகையால் தோற்றுவிக்கப்பட்டதால் விநாயகரை சக்தி அம்சம் என்றும் கூறுவர். சிவமின்றி சக்தியும், சக்தியின்றி சிவமும் இல்லை. எனவே, விநாயகரையும் சிவ அம்சமாக கருதலாம். இவர் தந்தையின் "ஈஸ்வர' பட்டத்தையும் பெற்றிருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக இக்கோயிலில் விநாயகரே, சிவனாக கருதி வழிபடப்படுகிறார். சிவனின் பெயரால் இவர், "ஆதிகும்பேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். ஏகாதச ருத்ரஜபம்: சிவனிடம் இருந்து படைப்புத்தொழிலை பெற்ற பிரம்மா, பல உயிர்களை படைத்தார். ஆனால் அவர்களுக்கு அழிவு உண்டாகவில்லை. உலகத்தில் பாரம் அதிகரித்தது. சிவன் அவரிடம், தான் தவத்தில் இருந்தபோது பிறந்ததால் அவர்களுக்கு அழிவில்லை என்றும், தன் பெயரால் அவர்கள் "ருத்ரர்கள்' என அழைக்கப்படுவர் என்றார். மேலும் அவர்களை படைப்புத்தொழிலுக்கு உதவியாக இருக்கும் பணியையும் கொடுத்தார். மகிழ்ந்த ருத்ரர்கள் யாகம் நடத்தி சிவனை வணங்கினர். சிவ அம்சமான ருத்ரர்கள் சிவனுக்குரிய உயர்ந்த மந்திரங்களை சொல்லி வணங்கி செய்த பூஜையே, "ருத்ரஜபம்' ஆகும். ஆனி மாதம் வளர்பிறை பூச நட்சத்திரத்தன்று, இக்கோயிலில் விநாயகருக்கு, சிவனுக்குரிய "ஏகாதச ருத்ரஜப பாராயணம்' நடக்கிறது. இந்த பாராயணத்தின் போது 11 வேதவிற்பன்னர்கள், சிவனுக்குரிய மந்திரங்களை 11 முறை சொல்லி பூஜை செய்கின்றனர். இந்த பாராயணம் கேட்பவர்களது பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சுயம்பு மூர்த்தியான விநாயகரின் உருவம் முறையான அமைப்பில்லாமல் உள்ளது. சிறப்பம்சம்: தவம் செய்வதற்காக வந்தவர் என்பதால், இக்கோயிலில் விநாயகர் மட்டும் தனிக்கோயில் மூர்த்தியாக இருக்கிறார். பிரகார தெய்வங்கள் ஏதுமில்லை. கோயில் வளாகத்தில் அரச மரம் உள்ளது. இம்மரத்திற்குள் ஒரு நாகர் சிலை இருக்கிறது. இதை வெளியில் இருந்து பார்க்க முடியாது. இதற்கு முன்னால் நாகதீபம் ஒன்று இருக்கிறது. இந்த தீபம் நாகம் போலவே, வளைவாக அமைக்கப்பட்டிருக்கிறது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்த தீபத்தில் விளக்கேற்றி, மரத்திற்கு வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top