அழகு மட்டுமின்றி ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்குவது கூந்தல். அளவுக்கு அதிகமான மனஉளைச்சல், உடலில் சத்துக்குறைவினாலும் கூந்தல் உதிர்வது வாடிக்கை.
கரு கரு வென கூந்தல் செழித்து வளர வேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்து பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள் பலர் உண்டு. முட்டை, பயறுவகைகள், வைட்டமின் சி, இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கூந்தல் பளபளப்பிற்கு
தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று விற்பனை செய்யப்படுகின்றன. இவை தலைமுடியின் ஆயுளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுத்தமான நல்லெண்ணெய்யும் சுத்தமான தேங்காய் எண்ணெய்யும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.
தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.
சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும். கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
இளநரை நீங்கி முடி கருப்பாக
நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.
சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.
சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்
பேன், பொடுகு தொல்லை நீங்க
வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும். இதனால் பேன் தொல்லை குறையும்.
துளசி இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால் பேன் செத்து உதிர்ந்து விடும் தலைமுடியும் நன்றாக வளரும்.
50 கிராம் உப்பு கலக்காத வேப்பம்பூவுடன் 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும். வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.
தலை முடி செழித்து வளர
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும். தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும். பின்னர் முடி செழித்து வளரும்.
முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.
ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
0 கருத்து:
கருத்துரையிடுக