முருகன், குமரன், கந்தன், சரவணன், ஆறுமுகன், கார்த்திகேயன், சுப்ரமணியன், வடிவேலன், சுவாமிநாதன், செந்தில்நாதன் என்று பல்வேறு பெயர்களால் போற்றப்படுபவர் தமிழ்க் கடவுள் முருகப் பெருமான். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். கொடுமைகள் பல
புரிந்துவந்த சூரபத்மனை அவர் சம்ஹாரம் செய்த நாள் கந்த சஷ்டி என்று அழைக்கப்படுகிறது. முருகனின் அவதார நோக்கமே சூரனை வதைத்ததுதான். இதை கொண்டாடும் வகையில் அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழாவும் சூரசம்ஹாரமும் நடைபெறுகின்றன.
ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை தொடங்கி சஷ்டி திதி வரையிலான 6 நாட்கள் விரதம் இருப்பது சஷ்டி விரதம் எனப்படுகிறது. 6 நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் சஷ்டி தினத்தில் மட்டுமாவது விரதம் இருந்து வழிபடலாம். ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்பார்கள். இந்த சொற்றொடர் கந்த சஷ்டி விரதத்தின் சிறப்பை உணர்த்துகிறது. சஷ்டி விரதம் இருந்தால் சற்புத்திர யோகம் உண்டாகும். கல்வி, கேள்வியில் சிறந்து விளங்கும் குழந்தைகள் பிறப்பார்கள் என்பது இதன் பொருள்.
சிவபெருமானின் நெற்றிக் கண் தீப்பொறியில் இருந்து உருவானவன் கந்தப் பெருமான். நெற்றிக் கண்ணில் இருந்து புறப்பட்ட தீப்பொறி சரவணப் பொய்கையில் 6 பகுதியாக விழுந்தது. அவை ஒவ்வொன்றும் ஒரு குழந்தையாக உருப்பெற்றது. 6 கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகளை பார்வதி தேவி இணைத்து ஆறுமுகனாக மாற்றினாள் என்கிறது புராணம். தேவர்களை அடக்கி பஞ்ச பூதங்களின் செயல்பாட்டையும் தன்வசப்படுத்தியிருந்தனர் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய அசுரர்கள். அவர்களை அழிப்பதற்காக தோன்றியவன் முருகப் பெருமான். சூரபத்மனை அழிக்க 6 நாள் போர் நடக்கிறது. சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரை முருகப் பெருமான் முதலில் வதம் செய்கிறார். 6 நாள் நடந்த போரின் முடிவில் முருகனை ஏமாற்றும் விதத்தில் மாமரமாக மாறி நிற்கிறான் சூரன். அன்னை பார்வதி தேவி கொடுத்த வேலால் மரத்தை பிளக்கிறார் முருகன். பிளவுபட்ட மாமரமானது சேவலாகவும் மயிலாகவும் மாறுகிறது. சேவலை தனது கொடியாகவும் மயிலை தனது வாகனமாகவும் ஏற்றுக் கொள்கிறார் முருகப் பெருமான்.
அசுரர்களுக்கு மோட்சம் அளிக்கும் முருகப் பெருமான், தேவலோகத்தை தேவேந்திரனிடம் ஒப்படைக்கிறார். சூரனை சம்ஹாரம் செய்த கந்தனுக்கு தன் மகள் தெய்வானையை மணமுடித்து தருகிறார் தேவேந்திரன். தேவசேனா, தேவயானை, தேவயானி, ஜெயந்தி ஆகிய பெயர்கள் தெய்வானையையே குறிக்கிறது. இதை கொண்டாடும் வகையில் சூரசம்ஹாரத்துக்கு அடுத்த நாள், முருகன் கோயில்களில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
சிங்கமுகன், தாரகாசுரன், சூரபத்மன் ஆகியவை நமக்குள் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று தீய குணங்களின் அடையாளங்கள். அவற்றை நாம் வெற்றி கொண்டால் உயர் நிலையை அடையலாம் என்பது சூரசம்ஹாரம் காட்டும் நெறியாகும்.
முருகனுக்கு கிழமை, நட்சத்திரம், திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன. கிழமைகளில் செவ்வாய், நட்சத்திரத்தில் கிருத்திகை, திதியில் சஷ்டி ஆகியவை முருகனுக்கு உகந்தவை. வெறுமனே தண்ணீர் மட்டுமே குடித்து விரதம் இருப்பது, பால் மட்டும் குடிப்பது, மவுன விரதம் இருப்பது என விரதத்தில் பல வகைகள் இருக்கின்றன. அவரவர் குடும்ப வழக்கப்படி இதை அனுசரிப்பார்கள். அறுபடை வீடுகள் உள்பட முருகன் கோயில்கள் அனைத்திலும் கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் போன்ற வழிபாடுகள் நடக்கும். சஷ்டி விரத காலத்திலும் சூரசம்ஹார தினத்தன்றும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை பாராயணம் செய்யலாம். விரதம் இருந்து, உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி மனதார பிரார்த்தித்து வழிபட்டால் நமக்கு எதிராக வரும் அனைத்து தடைகள், தடங்கல்கள், பிரச்னைகளையும் முருகப் பெருமான் தகர்த்தெறிந்து வளமான வாழ்வு அருள்வார் என்பது நம்பிக்கை. முருகனை கந்தசஷ்டியன்று வழிபட்டு சகல நலன்களும் பெறுவோம்.
0 கருத்து:
கருத்துரையிடுக