பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நம்யல் வாங்சக் மணமகள் ஜெட்சன் பெமாவை திம்புவில் உள்ள பிரம்மாண்ட புத்தர் சிலைக்கு முன் நேற்று திருமணம் செய்து கொண்டார். பூடான் மன்னர் ஜிக்மி கேசர். வயது 31. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். பூடானை சேர்ந்த பைலட்டின்
மகளான பெமாவை (21) மன்னருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. தலைநகர் திம்புவில் இருந்து 71 கி.மீ. தொலைவில் புனகா டாங்கில் இருவரது திருமணம் நேற்று கோலாகலமாக நடந்தது.
பூடான் வரலாற்றில் இதுவரை இல்லாத ஆடம்பரமாக இந்த திருமணம் இருந்தது. மணமகள் பெமா, தனது பள்ளிப் படிப்பை இமாச்சலில் முடித்தார். இப்போது லண்டன் ரீஜன்ட் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கிறார். மன்னர் திருமணத்தை பூடான் அரசு டிவியான சர்வீஸ் டிவியின் நேரடி ஒளிபரப்பில் மக்கள் பார்த்தனர்.
புத்த மத வழக்கப்படி திருமண சடங்கின்போது தனது அரியணையில் இருந்து மன்னர் கீழே இறங்கி வந்து மணமகள் பெமாவின் தலையில் கிரீடம் சூட்டினார். அப்போது தம்பதியர் இணை பிரியாமல் வாழ துறவிகள் வாழ்த்துரை வழங்க, மணமக்கள் மீண்டும் அரியணைக்கு திரும்பினர். மன்னர் அரியணை அருகே புதிதாக போடப்பட்ட அரியணையில் மணமகளை மன்னர் அமர வைத்தார். மன்னர் திருமணத்தை முன்னிட்டு பூடான் எங்கும் வாழ்த்து போஸ்டர்கள், நினைவு பொருட்கள், பேட்ஜ்கள் இடம்பெற்றிருந்தன. விஐபிக்கள் 1,500க்கும் மேற்பட்டோர் திருமண விருந்தில் பங்கேற்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக