கள்ளக்காதல் ஜோடியான நர்சிங் மாணவி, வேன் டிரைவர் இருவரும் விஷம் சாப்பிட்டனர். சிகிச்சை பலனின்றி மாணவி இறந்த நிலையில், தீவிர சிகிச்சையில் இருந்த வேன் டிரைவர் நேற்று அதிகாலை இறந்தார்.
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே
செக்கடிவிளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(29). வேன் டிரைவர். இவரது மனைவி லதா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. அஞ்சுகிராமம் அருகே உள்ள கன்னங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரிஸ்கா(21). நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்தார்.
கடந்த 1 வருடத்துக்கு முன், செல்போன் எண் மாறி சென்ற அழைப்பின் மூலம் கண்ணனுக்கும், பிரிஸ்காவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின் அதுவே கள்ளக்காதலாகவும் மாறியது. இதையறிந்த பிரிஸ்காவின் பெற்றோர், ஒரு பெண்ணுக்கு கணவனாக இருப்பவனை காதலிக்காதே. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. உன் வாழ்க்கை நாசமாகி விடும் என்று அறிவுரை கூறினர். கண்ணனையும் அழைத்து கெஞ்சி, தனது மகளை விட்டு விடுமாறு கதறினர். அவரும் பிரிஸ்காவை மறந்து விடுவேன் என்றெல்லாம் கூறி இருக்கிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பிரிஸ்காவும், கண்ணனும் கன்னங்குளம் வந்து, வேனில் அமர்ந்தவாறு நீண்ட நேரம் பேசியுள்ளனர். பின் பழத்தில் விஷ மாத்திரைகளை வைத்து இருவரும் சாப்பிட்டனர். இதில் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து பிரிஸ்கா மயங்கி விழுந்தார். அரை மயக்கத்தில் இருந்த கண்ணன், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.
இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரிஸ்கா இறந்தார். இது பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். தீவிர சிகிச்சை பெற்றுவந்த கண்ணனும் நேற்று அதிகாலை இறந்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக