புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும்.'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில்
பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

இந்துக்கள் தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.

இராமாயண இதிகாசத்தில், இராமர்,இராவணனை அழித்து விட்டு,தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை,அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.

இதேபோல் இன்னொரு புராண கதையில் கிருஸ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான்.அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ் வரம். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.

இதற்கு ஸ்கந்த புராணத்திலும் ஒரு நிகழ்வு கூறப்படுகின்றது. சிவனோடு ஒரு சந்தர்ப்பத்தில் கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றிணைகிறார்.இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தினத்தில் சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவ மெடுக்கின்றார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைகின்றதாக கூறுகின்றனர்.

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான  மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் ஆண்கள் வேட்டியும் கட்டுவார்கள்.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும்,தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும்,குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் " என்று அழைப்பார்கள் . இந்துப் பண்டிகையாய் இருந்தாலும்,சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வார்கள். உறவினர்வீடுகளுக்கு சென்று சந்தோசப்படுத்துவார்கள்.









தீபத் திருநாளைக் கொண்டாடும் எமது வாசகர்களுக்கு
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

சாந்தை இணையம் 26.10.2011 !

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top