நமது இயல்பே அமைதிதான், நம் சொரூபமே சாந்த சொரூபம்தான்.மனம் ஒரு பேய். எண்ணங்களின் மூலம் நம்மை அலைக்கழிக்க முயன்று கொண்டே இருக்கும்.தியானம் என்றாலே எண்ணும் காரியத்தைக் கைவிடுவதுதான். நாம் உலகத்துக்கு வெளியில் இருந்து பழக வேண்டும். உலகமும் அதன் பிரச்சனைகளும் நம் மனதிற்குள் புகுந்துவிடக்
கூடாது. சும்மா இருப்பதுவே தியானம். அதாவது இளைப்பாறுதல்.
உடல்தான் இயற்கை படைத்த மெய்யான பொருள். மனம் பொய்யானது. மனிதனின் பழக்கங்களினால் உருவாக்கப்பட்டது. மனம் நம்மை நிகழ்காலத்திலிருந்து விலக்கி கனவு உலகத்துக்கு இட்டுப் போய்விடும்.எந்தக் காரியத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதாகப் பாவியுங்கள். எந்தக் காரியம் செய்தாலும், அதன் பலன்கள் மீது நமக்கு உரிமையும், ஆதிக்கமும் , அதிகாரமும் கிடையாது.
எது கிடைத்தாலும் அதை அப்படியே பிரசாதமாக ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.எதிலும் ஆசையும் பற்றையும் வளர்க்காமல் காரியம் செய்யப் பழகுங்கள். மனம் நம்மை ஏமாற்றாது.நல்லது-கெட்டது, வெற்றி-தோல்வி என்பன தனித்தனியாக இல்லை. இரண்டுமாக இருப்பதே இயற்கை நியதி. அதுதான் வாழ்க்கையின் ரகசியம். அவரவர் சுவதர்மப்படி வாழ்தலே யோகம். அதேபோல மற்றவர்களையும் அப்படியே ஏற்று அணைக்கும் பாவமும், மனப்பக்குவமடைதலே சுதர்மம்.
எதையும் எடைபோட்டுத் தீர்ப்பளிக்கும் வழக்கத்தைக் கைவிடுங்கள். ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். தவறுகள், இன்பம், துன்பம் உலகில் இல்லை. எல்லாமே நமக்குள்ளேதான். உயிர்ச்சக்தியை உடலின் மேற்பகுதியிலேயே, முடிந்தால் உச்சியிலேயே வைத்துப் பழகுங்கள். விளிம்புக்குச் செல்லாதீர்கள். இருட்டை நீக்க இருட்டுடன் போராடாதீர்கள். வெளிச்சத்தைக் கொண்டு வாருங்கள். இருள் தானாகப் போய்விடும். பகவானிடம் பட்டியலிட்டுப் பிரார்த்திக்காதீர்கள். போதும் என்கிற மனத்துடன் தியானியுங்கள்.
நாம் பரிநிர்வாணமடைய வேண்டுமானால் அகங்காரம் என்ற ஆடையைக் களையுங்கள்.வள்ளலாரின் அருள் வாக்காகிய தனித்திரு-பசித்திரு-விழித்திரு என்றபடி இருந்து பழகினால் நம் வாழ்க்கையில் பேரின்பம் அடையலாம்.பேரின்பமென்பது மனிதனின் இறுதி இலட்சியம் ஆகும்.
0 கருத்து:
கருத்துரையிடுக