காதலித்த பெண், வேறொருவரை திருமணம் செய்ததால், மனமுடைந்தவர் திருமணமே செய்யாமல், 64வது வயது வரை இருந்து விட்டார். அதன்பின், வாழ்க்கைத் துணை தேவை என கருதி, சமீபத்தில் திருமணம் செய்தார். ஆனால், திருமணம் செய்த 29 நாளிலேயே திடீரென இறந்து விட்டார்.கேரளா, திருவனந்தபுரம் பாலோடு
பகுதியைச் சேர்ந்தவர் பஷீர், 64. இவர் தன் இளம் வயதில், அதே பகுதியைச் சேர்ந்த ஷீலா என்பவரை காதலித்தார்.
ஆனால், பல்வேறு காரணங்களால், அப்பெண் வேறொருவரை திருமணம் செய்ய நேரிட்டது. மனமுடைந்த பஷீர் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். வயதாக, வயதாக, திருமணம் செய்து கொண்டால் என்ன என்று மனம் ஏங்கியது. அப்போது தான், அவருக்கு, தன் பழைய காதலி நினைவு வந்தது. அவரை குறித்து விசாரித்தபோது, அவர் தற்போது விதவையாக இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். தன் வயதான காலத்தில், ஒரு துணை தேவை என்பதை உணர்ந்த அவர், தன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பமா என்பதை, பழைய காதலியிடம் கேட்டார். அவரது விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்த பழைய காதலியை, பதிவு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், அக்., 23ம் தேதி தான் ஒன்றாக வாழ துவங்கினர். திடீரென உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனைக்கு சென்ற பஷீரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். மேலும், அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெறவேண்டும் என, டாக்டர்கள் வற்புறுத்தியதை அடுத்து, அவர் திருவனந்தபுரம் ஆர்.சி.சி., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். திருமணமே வேண்டாம் என வாழ்ந்தவர், 64ம் வயதில் பழைய காதலியை கரம் பிடித்து, ஒரு மாதம் கூட சேர்ந்து வாழ முடியாமல் இறந்து விட்டது, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
0 கருத்து:
கருத்துரையிடுக