இத்தாலியின் புதிய பிரதமராக மரியோ மோன்ட்டி, 68, நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். புதிய அமைச்சரவை உருவாக்குவதற்கான கால அளவை அவர் அறிவிக்க மறுத்து விட்டார். "மதிப்பு மற்றும் நம்பிக்கையுடன் கூடிய எதிர்காலத்தை, இத்தாலி மக்களுக்காக உருவாக்க நான் விரும்புகிறேன்' என,
அவர் கூறியுள்ளார்.சில்வியோ பெர்லுஸ்கோனி பிரதமர் பதவியை, கடந்த 12ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிபர் ஜியார்ஜியா நபோலிடனோ, ஐரோப்பிய யூனியன் முன்னாள் கமிஷனரும், பொருளாதாரத் துறை பேராசிரியருமான மரியோ மோன்ட்டியை நேற்று புதிய பிரதமராக அறிவித்தார்.
புதிய பிரதமருக்கும், ஆட்சிக்கும் தன் கட்சி ஆதரவளிக்கும் என, முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி நேற்று அறிவித்தார்.இந்நிலையில், புதிய அமைச்சரவை அமைப்பதற்கான கால அளவை அறிவிக்க, மோன்ட்டி மறுத்துவிட்டார். புதிய அமைச்சரவை குறித்து ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளுடன் அவர் கலந்தாலோசித்து வருகிறார்.பொறுப்பேற்ற பின் அளித்த பேட்டியில், மோன்ட்டி கூறியதாவது:மதிப்பு மற்றும் நம்பிக்கையுடன் கூடிய எதிர்காலத்தை, இத்தாலி மக்களுக்காக உருவாக்க நான் விரும்புகிறேன். மீண்டும் இத்தாலி நிச்சயம் முன்பை விட வேகமாக உறுதியுடன் எழுந்து நிற்கும். தற்போதைய சிக்கலான நிலைமையை பார்லிமென்ட் உறுதுணையுடன் விரைவான நடவடிக்கைகள் மூலம் கடந்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு மோன்ட்டி தெரிவித்தார்.ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தாலும், பெர்லுஸ்கோனியின் கூட்டணியில் இருந்த "வடக்கு லீக்' கட்சி, மோன்ட்டியின் கொள்கைகள் தெளிவாகத் தெரியும் வரை ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக