நமது மூளையின் பத்து சதவிகிதத்தை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இதில் இருந்து, எஞ்சிய 90 சதவிகித மூளையையும் நாம் பயன்படுத்தினால் நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற விவாதம் தொடங்கியது.உண்மையைக் கூறுவதானால், மனித மூளை ஏதாவது ஒரு நேரத்தில் முழுமையாகப்
பயன் படுத்தப்படவே செய்கிறது. எந்த ஒரு நேரத்திலும் நமது மூளையில் 3 சதவிகிதத்திற்கும் அதிகமான நியூரான்கள் (Neurons) எரிக்கப் படுவதில்லை என்றும், இல்லாவிட்டால், இத்தகைய எரிப்புக்குப் பிறகு ஒவ்வொரு நியூரானையும் மறுபடியும் சரி செய்ய மூளையினால் கையாள இயலாத அளவு ஆற்றல் தேவை என்றும் நியூயார்க் பல்கலைக் கழகத்தின் நரம்பு அறிவியல் மய்யத்தின் பீடர் லென்னி ( Peter Lennie of the New York University Centre for Neural Science) என்பவர் கூறுகிறார்.
மனிதர்களின் மத்திய நரம்பு மண்டலத்தின் மூளை, தண்டுவடம் என்ற இரு பகுதிகளும், நியூரான் மற்றும் கிளியா (glia) என்ற இரண்டு வகையான செல்களால் ஆனவை. நியூரான்கள் தங்களின் அடிப்படைத் தகவல் சேர்க்கையில் தங்களுக்குள் உள்வாங்குவதும், வெளியே அனுப்புவது ஆகிய செயல்களைச் செய்பவை. உள்வரும் தகவல்கள் கிளைபோன்ற டென்டிரைடுகளில் (Dentrites) வழியாக வருகின்றன. வெளிச்செல்லும் தகவல்கள் கேபிள் போன்ற ஆக்சன்கள் (axzons) மூலம் செல்கின்றன.
ஒவ்வொரு நியூரானும் 10,000 டென்டிரிக்களைப் பெற்றிருக்கும்; ஆனால் அதனிடம் ஒரே ஒரு ஆக்சன்தான் இருக்கும். நியூரான் செல்லின் சிறிய உடலை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிக நீளம் கொண்டதாக ஆக்சன் இருக்கும். ஒட்டகச்சிவிங்கியின் ஆக்சன் 4.5 மீட்டர் (15 அடி) நீளம் கொண்டது.
சினாப்சிஸ் என்பவை ஆக்சன் மற்றும் டென்ட்ரைடுகளுக்கிடையே இருக்கும் இணைப்புகளாகும். இங்குதான் மின்னதிர்வு உணர்வுகள் வேதியியல் சமிக்ஞை களாக மாற்றப்படுகின்றன.
மின்விளக்கு சுவிட்ச் (switch) போன்ற சினாப்சிஸ் தான் ஒரு நியூரானையும் மற்றொரு நியூரானையும் இணைத்து, ஒரு வலைப் பின்னல் அமைப்பாக (network) மூளையை ஆக்குகின்றது. கிளியா செல்கள் மூளையின் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்கின்றன. நியூரான்களை மேற்பார்வையிடுவதுடன், வீட்டு நிருவாகப் பணிகளைச் செய்துகொண்டு, நியூரான்கள் இறந்தபின் அவற்றின் இடிபாடுகளை அகற்றும் பணியையும் அவை செய்கின்றன. மூளையில் இருக்கும் நியூரான்களை விட அய்ம்பது மடங்கு அதிக எண்ணிக்கையில் கிளியாக்கள் உள்ளன.
ஏறக்குறைய 50 லட்சம் கி.மீ. (முப்பது லட்சம் மைல்) ஆக்சன்களும், ஒரு குவாடிரில்லியான் சினாப்சிஸ்களும், 2000 கோடி நியூரான்களும் ஒரு மனித மூளையில் இருக்கின்றன. நியூரான்களைப் பக்கம் பக்கமாக அடுக்கி வைத்தால், அவை 25,000 சதுர மீட்டர் (ஏறக்குறைய 30,000 சதுர கெஜம்) பரப்பு கொண்டதாக இருக்கும். இது நான்கு கால்பந்து மைதானங்களின் அளவாகும்.
மூளையில் தகவல் பறிமாற்றம் செய்து கொள்ளும் வழிகளின் எண்ணிக்கை, இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கையை விட அதிகமானது. இத்தகைய வியத்தகு ஆற்றல் கொண்ட நமது மூளையில் எந்த அளவுக்கு நாம் பயன்படுத்தினாலும் சரி, இன்னும் கொஞ்சம் மேலான முறையில் நிச்சயமாக நம்மால் அதைப் பயன்படுத்த முடியும்.
0 கருத்து:
கருத்துரையிடுக