புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு முனுசாமி நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி, 38. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சரஸ்வதி, 28. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. லோகேஸ்வரி, 8. சந்தோஷ், 4. என்று குழந்தைகள் உள்ளனர். தனியார் பள்ளியில் முறையே 3 மற்றும் எல்.கே.ஜி. வகுப்புகளில் படித்து வருகின்றனர். குடி பழக்கத்திற்கு அடிமையான
பார்த்தசாரதியுடன் அவரது மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த சரஸ்வதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூட சகஜமாக பழகுவதில்லை.

கடந்த 27ம் தேதியும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பார்த்தசாரதி மனைவியை அடித்துள்ளார். படுக்கை அறை கட்டில் மீது ஏறி, சரஸ்வதி மின் விசிறியில் புடவையால் தூக்கிட்டுக் கொண்டார். போதை தெளிந்த பார்த்தசாரதி, அதிர்ச்சி அடைந்தார். மனைவியை காப்பாற்ற கத்தரியால் புடவையை வெட்டினார். பாரம் தாங்காத சரஸ்வதியின் உடல் கட்டில் மீது அமர்ந்த நிலையில் விழுந்தது. இதைப் பார்த்த குழந்தைகள் பீதியில் உறைந்தன. பிணத்தை அப்படியே விட்டு, அறைக்கதவை பூட்டிய அவர், போலீசுக்கு தகவல் தெரிவிக்க பயந்து குழந்தைகளுடன் அமைதியாக இருந்து விட்டார். சம்பவம் நடந்த போது பலத்த மழை, வெள்ளம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் குழந்தைகள் வீட்டில் இருந்தனர். விஷயத்தை வெளியில் சொல்லி விடுவார்களோ என்ற பயத்தில், பார்த்தசாரதி குழந்தைகளைக் கண்காணித்தபடி வீட்டில் இருந்து விட்டார்.

தாய் இறந்த துக்கம், தந்தையின் மர்மமான செயல்பாடுகளால் வீட்டில் நிலவும் மயான அமைதியில் பீதியடைந்த குழந்தைகள், தவித்துக் கிடந்தனர். குழந்தைகளுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட வழக்கமான நடவடிக்கையால் வீட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். மழை காரணமாக சரஸ்வதியின் உடல் பூட்டியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் ஏதும் வெளியாகவில்லை. மழை விட்டு, நேற்று முன் தினம் வெயில் அடித்ததால், துர்நாற்றம் வீசியதை அக்கம் பக்கத்தினர் உணர்ந்தனர். நேற்று மாலை இது அதிகளவில் இருந்தது.

மாதவரம் போலீசில் புகார் செய்தனர். துணைக் கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு, இரவு 9 மணி அளவில் சென்றனர். அப்போது, பார்த்தசாரதி "டிவி' நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்க, குழந்தைகள் பயத்தில் அமர்ந்திருந்தனர். போலீசாரைக் கண்டதும், ஐந்து நாட்களாக தவித்த குழந்தைகள் போலீசாரிடம் தஞ்சம் அடைந்தன. சரஸ்வதி பிணம் கிடந்த அறையை திறந்ததும், குழந்தைகள் அலறி அடித்து வீட்டிற்கு வெளியில் ஓடினர். போலீசார் விசாரணை நடத்தினர்.

பார்த்தசாரதி, போலீசாரிடம் கூறுகையில், ""எனது மனைவி இறந்தது குறித்து, அதே பகுதியில் இருக்கும் எனது அக்காவிற்கு தகவல் தெரிவித்தேன். ஆனால், உடல் நலம் பாதிப்பு காரணமாக அவர், நான் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளவும் இல்லை. இங்கு வரவும் இல்லை,'' என்றார். பிணம் கிடந்த அறையில், அம்மிக்குழவி இருந்ததாலும், சம்பவம் குறித்து, உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்காததாலும் சந்தேக மரணத்தின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைரேகை தடயவியல் நிபுணர்கள் மேற்கண்ட வீட்டில் ஆய்வு நடத்தினர். குழந்தைகள், பார்த்தசாரதியின் அக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஐந்து நாட்கள், அந்த வீட்டில் மரண பயத்துடன் இருந்த குழந்தைகளுக்கு, மருத்துவ பரிசோதனை மற்றும் தொற்று நோய் பாதிப்பு சிகிச்சை அளிப்பது அவசியம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top