மகளிடமே தகாத முறையில் நடந்து கொண்ட கணவனை, அவருடைய மனைவியே கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றார்.மதுரை திருப்பாலை பாரத் நகரில் வசித்து வந்தவர் வீரணன் என்ற ஜோதிபாசு. இவருடைய மனைவி உஷா ராணி.இவர்களுக்கு 3 மகள்களும், யுவராஜ் என்ற
மகனும் உள்ளனர்.மூத்த மகள் தனியார் நிறுவனத்தில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார். மற்றவர்கள் படித்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த நவம்பர் மாதம் தான் திருப்பாலைக்கு குடி வந்துள்ளனர். அதற்கு முன் சிந்தாமணியில் வசித்து வந்துள்ளனர். ஜோதிபாசு தனது தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவதோடு குடித்து விட்டு தனது வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.கடந்த 2006-ம் ஆண்டில் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு முற்றியது. இதில் ஜோதிபாசு தனது மனைவியை தாக்கியதில் அவரது கால் உடைந்தது.
இதனால் பிரச்சினை முற்றி ஜோதிபாசுவிடம் இருந்து அவருடைய மனைவி உஷாராணி விவாகரத்து பெற்று விட்டார். பின்னர் உஷாராணியும் அவருடைய குழந்தைகளும் அவனியாபுரத்தை அடுத்த சிந்தாமணியில் வசித்து வந்தனர்.தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு உஷாராணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நிலுவையில் உள்ளது.
இவர்கள் இருவரிடையே வழக்கறிஞர்கள் சமரசம் செய்து வைத்ததன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் சேர்த்து வைத்தனர்.அதன்பின் நவம்பர் 13-ந் தேதி திருப்பாலையை அடுத்த பாரத் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இங்கு வந்த பின்னும் ஜோதிபாசு அடிக்கடி குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு முற்றியது. இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீசில் உஷாராணி புகார் செய்தார்.
இதனையடுத்து கணவன்-மனைவியை அழைத்து போலீசார் பிரச்சினை குறித்து கேட்டனர். பின்னர் நாளை வாருங்கள் என்று கூறினர். இந்த நிலையில் நேற்று மாலை 51/2 மணியளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஜோதிபாசு வீட்டில் இருந்த 2-வது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அவரை மனைவி கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிபாசு, அருகில் இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து உஷாராணியை தாக்க முயன்றார். அதிலிருந்து தப்பிய உஷாராணி ஜோதிபாசுவின் கையில் இருந்த பேட்டை பறித்து அவரது தலையில் அடித்தார். இதில் ஜோதிபாசுவின் மண்டை இரண்டாக பிளந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜோதிபாசுவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
0 கருத்து:
கருத்துரையிடுக