அருமனை அருகே இன்று அதிகாலை, பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மாத்தூர்கோணத்தை சேர்ந்தவர் கணபதி (43). வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி மஞ்சு (38). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு, பிரசாந்த் (18) என்ற மகனும், ஆஷா (12) என்ற மகளும் உள்ளனர்.
பிரசாந்த் காலை 7 மணிக்கு வேலைக்கு செல்வதால், வழக்கம் போல் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மஞ்சு எழுந்து சமையல் செய்ய பின்பக்கம் உள்ள சமையல் அறைக்கு சென்றார். காலை 6.45 மணிக்கு எழுந்த பிரசாந்த் சமையல் அறைக்கு சென்றார். அங்கு மஞ்சு கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதை பார்த்ததும் பிரசாந்த் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
தகவல் அறிந்து அருமனை இன்ஸ்பெக்டர் ரெங்க நாதன், சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மஞ்சுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மஞ்சுவின் கழுத்தில் ஆழமாக கத்தி பதிந்து இருந்தது. நகை, பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. மர்ம ஆசாமி, மஞ்சுவிடம் தவறாக நடக்க முயற்சித்து, அது முடியாததால் கொலை செய்து இருக்கலாமா என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், மஞ்சு கொலை செய்யப்பட்டது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மஞ்சுவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபருக்கு இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாகவும், மஞ்சுவை தரக்குறைவாக பேசியதாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் தேடினார்கள். ஆனால் அவர் தலைமறைவாகி இருந்தார். எனவே மஞ்சுவை பக்கத்து வீட்டு வாலிபர் கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தலைமறைவாகி உள்ள அந்த வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக