தற்கால சூழ்நிலையில் அதுவும் யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் பாடசாலைகளை விட தனியார் கல்வி நிலையங்களிலேயே மாணவர்களும் பெற்றோர்களும் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்.இதனைக் காரணமாகக் கொண்டு தனியார் கல்வி நிலையங்களில் மாணவர் கூட்டம் அலைமோதுகின்றது.ஆனால் அங்கு நடத்தப்படுகின்ற பாடங்கள் என்ன? அப் பாடங்களைக் கற்பிப்பதோடு மாணவர்களுக்குப் புகட்டப்படும் ஆபாசக் கருத்துக்கள் என்ன? இதனால் ஏற்படக் கூடிய கலாசாரச் சீரழிவுகள் என்ன என்பது தொடர்பில் பெற்றோர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தமது பிள்ளைகள் பரீட்சையில் சிறந்ததொரு புள்ளிகளைப் பெற வேண்டும், வாழ்க்கையில் சிறந்ததொரு நிலையை அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடும் இலட்சியத்தோடும் பெற்றோர்கள் செயற்படுவதால், ஏற்படுகின்ற பின்விளைவுகளை அவர்கள் சிந்திப்பதாக இல்லை. இதனை அடிப்படையாகக் கொண்டு தனியார் கல்வி நிலையங்களின் பணம் பறி கொள்ளையும் தொடர்கின்றது.
இது இவ்வாறிருக்க தமது பாடங்களுக்கு அதிகளவான மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இடையிடையே ஆபாச வார்த்தைகளையும், கதைகளையும் கூறி மாணவர்கள் மனதில் ஆபாச எண்ணங்களை விதைக்கின்றனர் இந்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள்.அங்கு கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வயது எதற்கும் அஞ்சாத, யாருடைய கருத்துக்களுக்கும் மதிப்பளிக்காத வயதுடைய மாணவர்கள்.
இவர்கள் மத்தியில் இவ்வாறான ஆபாச வார்த்தைகள் ஆழமாகப் பதிய, அடுத்த மணித்தியாலயத்தில் அரங்கேறுகிறது கலாசாரச் சீரழிவு.என்ன செய்வது? பாடம் புகட்டும் ஆசானின் ஆபாச வார்த்தைகளைக் கேட்டு தமிழர் கலாசாரத்தைத் தாரைவார்க்கிறது மாணவர் கூட்டம்.இவ்வாறான ஆசிரியர்களின் செயற்பாடுகளை நிறுத்துவது தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களின் கட்டாய பொறுப்பாகும்.
இல்லை என்றால் எதிர்கால இளைஞர், யுவதிகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடுவதை யாராலும் தடுக்க முடியாததாகி விடும்.
0 கருத்து:
கருத்துரையிடுக