நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்போவதாக மகளிர் அமைப்பு அறிவித்துள்ளது. பிரபல கவர்ச்சி நடிகை சோனா, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகனும் தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.
தனது நண்பர் வைபவ் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது, அங்கு எஸ்.பி.பி. சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று காவல்துறையில் சோனா புகார் அளித்தார்.
நடந்த சம்பவத்துக்கு சரண் தன்னிடம் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவரை சும்மா விட மாட்டேன் என்று சோனா கூறினார். எஸ்.பி.பி. சரண் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சியை அவர் ஏற்க வில்லை.எஸ்.பி.பி. சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
இதற்கிடையே, விருந்தில் எஸ்.பி.பி. சரண் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்கு தன்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என்று கூறிய சோனா, அந்த வீடியோ ஆதாரத்தையும் போலீசிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால், எஸ்.பி.பி. சரண் இடைக்கால முன் பிணை பெற்றுள்ளார்.
இந்நிலையில் சரண் மன்னிப்பு கேட்காததால், சோனா மகளிர் அமைப்பின் ஆதரவை நாடியுள்ளார். அவருக்கு ஆதரவாக எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம் நடத்த "ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கம்" முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்க தலைவி கல்பனா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
சோனா ஒரு நடிகையாக இருக்கலாம். அதற்காக, எஸ்.பி.பி. சரண் அவரை ஆபாசமாக திட்டி இருக்கக் கூடாது. சோனா ஒரு பெண். அவருக்கும் கவுரவம் உள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
சோனா தனது புகாருக்கான ஆதாரங்களை போலீசில் அளித்துள்ளார். அவருக்கு எதிராக பாலியல் கொடுமை நடந்து இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது. எனவே தான் நாங்கள் சோனாவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளோம்.
எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு 500 பெண்கள் திரண்டு கறுப்புக் கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. சோனாவுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கல்பனா கூறியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக