ரஷ்யாவில் டிராம் வண்டியை திருடி சென்ற சிறுவனை 40 நிமிடங்களுக்கு பின்னர் போலீசார் மடக்கினர். ரஷ்யாவின் ஜிலாடவுஸ்ட் மாகாண யுரால்ஸ் நகரை சேர்ந்த 15வயது சிறுவன், (பெயர் வெளியிடவில்லை), டிராம் வண்டியை திருடி சென்று அனைவரையும் ஆச்சரியப்பட
வைத்துள்ளான். இதுகுறித்து ஜிலாடவுஸ்ட் மூத்த போலீஸ் அதிகாரி பாவெல் பாவ்லோவ் கூறியதாவது: சமீபத்தில் யுரால் பகுதியில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராம் வண்டியை சிறுவன் ஓட்டிச் சென்று விட்டான். வண்டி வழக்கமாக நிற்கும் நிறுத்தங்களில் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளான்.
அதேபோல் பயணிகள் இறங்க வேண்டிய இடங்களிலும் டிராமை நிறுத்தி உள்ளான். டிராம் ஓட்டுவது சிறுவன் என்பது தெரியாமல் மக்களும் அதில் பயணம் செய்துள்ளனர். டிராம் காணாமல் போன தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினோம். சுமார் 40 நிமிடங்கள் கழித்து அதை மடக்கினோம். அதை ஓட்டியது சிறுவன் என்று அதிர்ச்சி அடைந்து விட்டோம்.
டிராம் வண்டி பற்றி அவன் அதிகமாக படித்திருக்க வேண்டும். வண்டியை எப்படி இயக்குவது, எப்படி நிறுத்துவது என்று நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் வண்டியை அவ்வளவு எளிதாக ஓட்ட முடியாது. 40 நிமிடங்களாக டிராம் ஓட்டினாலும், எந்த விபத்தையும் சிறுவன் ஏற்படுத்தவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வண்டியை திருடுபவர்களுக்கு 5 ஆண்டு தண்டனை விதிக்கப்படும். ஆனால், சிறுவனின் எதிர்காலம் கருதி அவனை கைது செய்யவில்லை. கடுமையாக எச்சரித்தோம். இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக