செல்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் மூளையில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக வெளியான ஆய்வுகளை இப்போதைய ஆய்வு முடிவு நிராகரித்துள்ளது.கடந்த 20 ஆண்டுகளாக உபயோகத்தில் இருந்து வரும் செல்போனுக்கும் உடல்நல பாதிப்புகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஏராளமான ஆய்வுகள் நடந்துள்ளன.
சமீப காலமாக இது தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளிவருவது அதிகரித்தது.
செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு (ரேடியேஷன்) காரணமாக மூளையில் புற்றுநோய் ஏற்படலாம் என்று சில ஆய்வுகள் தெரிவித்தன. அவற்றை மேற்கோள் காட்டி சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ.) எச்சரிக்கை வெளியிட்டது.
எனினும், செல்போன் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய் ஏற்பட்டதற்கான ஆதாரம் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், டென்மார்க் நாட்டில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் விரிவான ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். 18 வயதுக்கு மேற்பட்ட அவர்களில் பெரும்பாலோர் பல ஆண்டுகளாக செல்போனை அதிகம் பயன்படுத்தி வருபவர்கள்.
அவர்களது உடல் நிலையை தீவிர பரிசோதனைகள் மூலம் ஆய்வு செய்ததில், செல்போன் பயன்படுத்துவதால் உடலில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படாதது தெரிய வந்தது. செல்போன் கதிரியக்கத்தால் புற்றுநோய் செல்கள் ஏற்படுவதற்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. எனவே, இதுதொடர்பான முந்தைய ஆய்வுகளை டென்மார்க் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் நிராகரித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக