மனிதன் என்பவன் உடல் + ஆன்மா + மனம் (+ புத்தி) என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து இயங்கினால்தான் மனிதன் வாழ்கிறான் என்று சொல்லலாம். ஒருவன் இறக்கும்போது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து செல்கிறது என்று கூறப்படுகின்றது. அப்போது அந்த ஆன்மாவுக்கும் இந்த உடலுக்கும் உள்ள தொடர்பு அறுந்து விடுகிறது என்று கூறுகிறார்கள்.
ஆன்மா பிரியும்போது மனமும் அழிந்து போகிறது.ஆன்மாவுக்கு எந்த குணமும் கிடையாது என்று சொல்லுகிறார்கள். பகவத்கீதையில் ஒரு அத்தியாயம் முழுவதும் இந்தக் கருத்து பல விதமாக திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆன்மா அருவமானது, ஆதி அந்தம் இல்லாதது, அழிவற்றது, இப்படிச் சொல்லிக்கொண்டே போகிறது.
சாதாரண நடைமுறையில் நாம் சொல்லும் உயிர் என்ற வார்த்தையை ஆன்மீக குருக்கள் ஒருபோதும் உபயோகிப்பதே இல்லை. இதைப்பற்றி கேள்வி கேட்பதற்கும் அனுமதிப்பதில்லை. குரு சொல்லும் உபதேசத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லி நம் வாயை அடைத்துவிடுகிறார்கள்.
நான் கருதுவது என்னவென்றால் இந்த ஆன்மா என்பதும் உயிர் என்பதும் ஒன்றுதான். இது உடலுடன் இருந்தால்தான் உடல் இயங்கும். இது பிரியும்போது உடல் சவமாகி விடுகிறது. உயிர் ஏன் உடலை விட்டுப் பிரிகிறது? உயிரை வைத்துப் போற்றும் திறன் உடலுக்கு இல்லாதபோது உயிர் பிரிந்து விடுகிறது.
அப்புறம் எதற்காக இந்த ஆன்மீகவாதிகள் “ஆன்மா” என்ற பெயரைப் புகுத்தினார்கள் என்றால் மக்களை குழப்புவதற்காகவே. அவர்கள் கூற்றுப்படி ஆன்மாவிற்கு எந்த குணபேதங்களும் இல்லையென்றால் அந்த ஆன்மா குடியிருக்கும் மக்களிடையே இவ்வளவு குணபேதங்கள் ஏன் இருக்கின்றன? ஒருவனுடைய கர்மவினைகள் அவன் இறந்த பிறகு அவனுடைய மறு ஜன்மத்திலும் அவனைத் தொடர்கின்றன என்று கூறுகிறார்கள். ஒருவன் இறந்த பிறகு எந்த சாதனத்தின் மூலம் அவனுடைய கர்ம வினைகள் அடுத்த ஜன்மத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன? இதற்கு எந்த ஆன்மீகவாதியும் சரியான விளக்கம் கொடுப்பதில்லை.
ஆக மொத்தம் உடல், உயிர், மனது+புத்தி இருப்பது நிஜம். மற்றவை எல்லாம் ஒரு நம்பிக்கை மட்டுமே. அவரவர்களுக்குப் பிடித்த நம்பிக்கையை அவரவர்கள் பின்பற்றலாம். ஆனால் நான் பின்பற்றும் நம்பிக்கைதான் உயர்ந்தது என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. அதுதான் முக்கியம். பல ஆன்மீக குருக்கள் சொல்வதைக் கேட்கலாம். ஆனால் அதுதான் உண்மை என்று மூடத்தனமாக நம்பக்கூடாது. அவரவர்களாக யோசித்து தங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை நம்புவதே சிறந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக