கணவனை மீட்டுத் தர, 12 நாட்களாக போராடிய பெண், நேற்று கைது செய்யப்பட்டார். திருப்பூர், அனுப்பர்பாளையம் அமிர்தம் மகள் பிருந்தாதேவி, 29. கடந்த 2008ல், ஈரோடு, வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனை, 35, காதல் திருமணம் செய்தார்.இவர்களுக்கு, திலக் என்ற இரண்டு வயது கைக்குழந்தை உள்ளது. சமீபத்தில் ராதாகிருஷ்ணனை, அவரது குடும்பத்தினர், ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். அதன்பின், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஈரோடு, வில்லரசம்பட்டியில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு, டிச., 12ம் தேதி வந்த பிருந்தாதேவி, கணவனை சேர்த்து வைக்கக்கோரி, அவரது வீட்டு வாயிலில், கைக்குழந்தையுடன் அமர்ந்து, 12வது நாட்களாக போராட்டம் நடத்தினார். அருகில் வசிக்கும் சிலர், போர்வை, கொசு வலை, குழந்தைக்கான பேபி பெட் ஆகியவற்றை வாங்கி கொடுத்தனர். கணவர் வீட்டு வராண்டாவிலேயே சமைத்து சாப்பிட்டார். கலெக்டரிடம் அவர் அளித்த மனு, எஸ்.பி.,க்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. பிருந்தாதேவியை அங்கிருந்து அகற்றுவதில், போலீசார் குறியாக இருந்தனர்.
நேற்று காலை 10 மணியளவில், வீரப்பன்சத்திரம் போலீசார், பிருந்தாதேவியை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அவருடன் இருந்த இரண்டு வயது மகன் திலக், தாய் அமிர்தம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கணவரை மீட்கக்கோரி, 12 நாட்களாக போராடிய பெண்ணுக்கு நியாயம் கிடைக்க, போலீசாரும், எந்தவொரு மகளிர் அமைப்பும் முன்வராதது புரியாத புதிராக உள்ளது.
புகார் தந்த அன்றே கைதாம்! கணவரை மீட்டுத் தருமாறு பிருந்தாதேவி கொடுத்த புகார் மீது, 12 நாட்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத போலீசார், பெண்ணின் மாமனார், அவர் மீது நேற்று காலை புகார் தந்ததும், உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொண்டு, தங்கள், "திறமையை' நிரூபித்தனர். பெண் பயன்படுத்திய, "மாருதி 800' கார், சமையல் பாத்திரங்கள், துணிமணி ஆகியவற்றையும் அள்ளிச் சென்றனர். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, போராட்டம் நடத்தியதாக, பிருந்தாதேவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக