புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஏராளமானோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

துருக்கியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவாகியிருந்தது. தபான்லி பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. தலைநகர் அங்காராவிலிருந்து 1,200 கி.மீ. தூரத்தில் உள்ள இப்பகுதியில் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
குர்து இன மக்கள் அதிகளவில் வசிக்கும் இப்பகுதியில் பல கட்டடங்கள் சேதமடைந்தன. 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, எரிக் பகுதியும் நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. செலிபிபாக் மாவட்டத்திலும் கடும் சேதமேற்பட்டுள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள பலர், தங்களைக் காப்பாற்றுமாறு கூக்குரலிடுவதைக் கேட்க முடிகிறது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், சேதமடைந்த பகுதிகளைச் சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று வான் நகர மேயர் பெகிர் காயா தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவத்தை அனுப்பிவைக்கவும், செயற்கைக் கோள் போன் வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இஸ்தான்புல்லைச் சேர்ந்த நிலநடுக்க ஆய்வு மையப் பேராசிரியர் முஸ்தபா எர்டிக் கூறுகையில், "இந்த நிலநடுக்கத்தில் 500 முதல் 1000 பேர் வரை இறந்திருக்கக் கூடும்' என்று தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கப் பாதிப்பால் மிகப் பெரியளவில் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசியப் பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது.
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.2 அலகுகள் பதிவானது. அதன் பின், மூன்று மணி நேரங்களுக்குள் 8 முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. அதில், இரண்டு முறை 5.6 அலகுகளாகப் பதிவானது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.2 கிலோ மீட்டர் ஆழத்திலும், இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 20 கி.மீ. ஆழத்திலும் ஏற்பட்டதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
துருக்கி புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் நிலநடுக்கத்துக்கு பின், இலிகாய்நாக், கெடிக்புலாக் கிராமங்களில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கப் பாதிப்பை அடுத்து துருக்கி பிரதமர் ரஸீப் தயாப் எர்தோகன், தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தார். சேதமடைந்துள்ள பகுதியில் மீட்புப் பணிகளைப் பார்வையிட விரைந்து சென்றுள்ளார். வான் விமான நிலையம் சேதமடைந்துள்ள போதிலும், விமான சேவை பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
துருக்கி-ஈரான் எல்லைப் பகுயிலும் நிலநடுக்கத்தின் தீவிரம் உணரப்பட்டது.
துருக்கி பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்பது தெரிந்ததே. 1999-ல் துருக்கியின் வடமேற்குப் பகுதியில் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 20,000 பேர் உயிரிழந்தனர். வான் பகுதியில் உள்ள கால்திரான் பகுதியில் 1976-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,840 பேர் உயிரிழந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top