சீனாவின் மிங் ராஜவம்சத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பீங்கான் மலர் ஜாடி இதுவரை இல்லாத அளவுக்கு 21.6 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விலை போயுள்ளது.
மிங் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட எந்த பீங்கான் பொருளும் இவ்வளவு பெருந்தொகைக்கு இதுவரை ஏலத்தில் விலை போனதில்லை.
சுவிஸ் நாட்டு பெருந்தொழில் அதிபர்கள் வசம் இருந்த இந்த மலர் ஜாடி, ஹாங்காங்கில் நடைபெற்ற ஏலத்தில் பெயர் வெளியிடப்படாத ஒருவரால் தொலைபேசி மூலம் வாங்கப்பட்டுள்ளது.
சோத்பி ஏல நிறுவனத்தால் ஹாங்காங்கில் ஏலத்தில் விடப்பட்ட இந்த மலர் ஜாடியும் அது பெற்றுத்தந்துள்ள தொகையும், ஆசிய கலைப் பொருட்களின் மதிப்பின் வல்லமையை உணர்த்தும் அளவுகோலாக பார்க்கப்படுகிறது.
உலகளவில் பொருளாதார நிலை ஒரு நிச்சயமற்றத் தன்மையில் இருக்கும் நிலையிலும், ஏலத்துக்கு வந்த மற்ற முக்கிய பொருட்களும் விற்பனை ஆகாத நிலையில், இந்த மலர் ஜாடி பெருந்தொகைக்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது.
இந்த மலர் ஜாடி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, சுவிஸ்ஸிலுள்ள ஜியூலிக் சகோதரர்களால் வாங்கி சேர்க்கப்பட்ட மியன்யின்டாங் சீன பீங்கன் பொருட்களின் சேகரிப்பின் ஒரு அம்சமாக இருந்தது.
கடந்த சில வருடங்களாக மிங் ராஜவம்ச காலகட்டத்து பீங்கான் பொருட்களுக்கான கிராக்கி பெருநில சீனர்களிடம் குறைவாகவே காணப்பட்டது. அதாவது மிங் காலப் பொருட்கள் எந்த வகையிலும் குயிங் காலப் பொருட்களின் விலையைத் தொடவில்லை.
மிங் வம்சம் 1368 முதல் 1644 ஆண்டு வரை ஆட்சியில் இருந்தாலும், அந்தக் காலத்து கலைப் பொருட்களில் காணப்படும் அலங்கார வேலைகள், பின்னர் ஆட்சியிலிருந்து குயிங் வம்சத்து (1644-1911) கலைப் பொருட்களில் காணப்படும் அலங்கார வேலைகளை விட குறைவாகவே இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங்கில் இந்த ஏலம் நடைபெறுவதற்கு முன்னர் என்ன நடக்கும் என்பது குறித்து பலர் கவலையடைந்திருந்தனர் என்று ஆசிய கலைப் பொருட்கள் வர்த்தகரான நடேர் ரஸ்டி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், பதினைந்தாம் நூற்றாண்டின் பீங்கான் பொருட்கள் பல காலமாக மிகக் குறைவான விலைக்கே விற்கப்பட்ட நிலையில், இந்த ஏலத்தை வைத்துப் பார்க்கும் போது, அவை நல்ல விலைக்கு போயுள்ளது என்றே கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மிங் காலகட்ட பல நல்ல பீங்கான் பொருட்கள் இன்னமும் குறைத்தே மிதிப்பிடப்பட்டுள்ளன எனவும் நடேர் ரஸ்டி கருத்து வெளியிட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக