குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவமனை ஆவணங்கள் மூலம் அறியலாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட்டில், பெரும்பாலான மாதங்கள் வெயில் தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்களின் உடல்நிலை, அதற்கேற்ப
மாறிக் கொள்வதால், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, அவர்களின் இருதயம், ரத்தக் குழாய்களின் ரத்தஓட்டத்தின் தன்மை மாறி விடுகிறது. எந்த வகையான மாற்றம்?
குளிர், ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கிறது. இதனால், இதயம், அளவுக்கு அதிகமாக வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறது.குளிர் பிரதேசம் மற்றும் மலை பிரதேசங்களில், பிராண வாயு குறைவாக இருக்கும். இதனால், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், தட்டை அணுக்கள், பைபர்நோஜன் அதிகரிக்கிறது. கூடவே கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது. இதனால், அளவுக்கு அதிகமாக ரத்தம் உறைந்து, இதயம், மூளை ஆகியவற்றுக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. ரத்தக் குழாயும் சுருங்கி விடுவதால், இப்பகுதிக்கு ரத்தம் செல்வதும் தடைபடுகிறது. இதனால், நடு வயதினருக்கும், பக்கவாதம், மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களுக்கு, குளிர் காலங்களில், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, 50 சதவீதம் அதிகரிக்கிறது. இதே நிலை தான், நம் நாட்டில் மலை பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கும் ஏற்படும். மார்பில் அழுத்தம் ஏற்படுவது தான், இதன் முதல் அறிகுறி. குளிர் காலத்தில் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. இதயத் துடிப்பு அதிகரித்து, ரத்தக் கொதிப்பும் ஏற்படுகிறது. ஏற்கனவே, ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களின் நிலை, இது போன்ற காலங்களில், மிகவும் பரிதாபம். தாறுமாறான இதயத் துடிப்புள்ள நோயாளிகள், “டீபிப்ரிலேட்டர்’ என்ற கருவியை பொருத்திக் கொள்வது வழக்கம். இது, “பேஸ் மேக்கரை’ப் போலத் தான் என்றாலும், “பேஸ் மேக்கர்’ குறைந்து போகும் இதயத் துடிப்பை சீர் செய்யும். “டீபிப்ரிலேட்டர்’ கருவி, அதிகரித்துப் போகும் இதயத் துடிப்பை சீர் செய்யும். இது போன்ற கருவி வைத்திருப்பவர்களும், மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டும்.
ஓய்வுக்காக மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும் முதியவர்கள், உடல் உஷ்ணம் 95 டிகிரி பாரன்ஹீட்டுக்குக் கீழே இறங்கி விடும். அப்படி இறங்கி விட்டால், உடல் நடுக்கம் ஏற்பட்டு, நிலை தடுமாறும். இதயம் செயலிழப்பு, மாரடைப்பு, மயக்க நிலை மரணம் ஆகியவை ஏற்பட்டு விடும். இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். தலைக்கு குல்லா, கை,கால்களுக்கு கம்பளியில் ஆன உறைகள் அணிவது ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மது அருந்துபவர்களும், மலைப் பிரதேசத்திற்குச் செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டும். மது அருந்தி விட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதோ, உலவப் போவதோ கூடாது. ஏனெனில், மது அருந்தியவுடன், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் உஷ்ணமாகும். பின், திடீரென உடல் வெப்பம் குறைந்து, ஆபத்தை விளைவித்து விடும். மது அருந்தி விட்டு, வெளியே போவதை அறவே தவிர்க்க வேண்டும்.
சம வெளிகளில் கூட, மார்கழி, தை மாதங்களில், இதய நோய்கள் ஏற்படுவது சகஜம். குளிர் அதிகம் ஏற்படுவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் நெஞ்சு அழுத்தம், மூச்சு இரைப்பு, படபடப்பு ஏற்படும். வாந்தி, மயக்கம், அசதி, தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும். ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், எப்போதும் கைப் பையில், “சார்பிட்ரேட்’ மாத்திரை வைத்திருக்க வேண்டும்.
மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், மாத்திரையை நாக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியும் குணமடையா விட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும். அது போல், “ஏசி’ அறைகளில், 20 டிகிரி செல்சியசில், தொடர்ந்து பல மணி நேரங்கள் அமர்ந்திருப்பதும் தவறு. அவ்வப்போது, அறையின் வெப்ப நிலைக்கு ஏற்றார்போல், “ஏசி’யை அணைத்து வைக்க வேண்டும். இங்கிலாந்தில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு மாரடைப்பு வருகிறது. அவர்களில் 86 ஆயிரம் பேர் இறக்கின்றனர். அமெரிக்காவில், குளிர் காலத்தில் இது போன்ற நிலை ஏற்படுகிறது. இது போன்ற காலங்களில், 75 முதல் 84 வயதுடையவர்கள், கை, கால்களுக்கு உறை, தலைக்கு குல்லா அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.
0 கருத்து:
கருத்துரையிடுக