மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கல்லூரி வளாகத்தில் தாய் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வண்டலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடிய காதலனை போலீசார் தேடிவருகின்றனர்.
வண்டலூரில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு பணியாற்றி வருபவர் கியாஜூதீன். இவர் தனது மனைவி தவ்ஹீத் நிஷா (39) மற்றும் 2 மகள்களுடன் கல்லூரி வளாகத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இருவரும் அங்குள்ள ஒரு பாலிடெக்னிக்கில் படித்தனர். அப்போது 2வது மகள் சர்மிதாவுக்கும், அதே பகுதியில் வசிக்கும் போலீஸ்காரர் ஒருவரின் மகன் சந்தானம் (21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த தாய் தவ்ஹீத்நிஷா, மகளை கண்டித்தார். அத்துடன் சந்தானத்துடன் பழகவும் தடை விதித்தார்.
இந்த சூழ்நிலையில் கடந்த 19ம் தேதி சந்தானம், தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கியாஜூதீன் வீட்டுக்கு வந்தார். முறைப்படி சர்மிதாவை திருமணம் செய்து தரும்படி தவ்ஹீத் நிஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், “நாங்கள் வேறு மதம் என்பதால் திருமணத்துக்கு எந்த வகையிலும் உறவினர்கள் சம்மதிக்க மாட்டார்கள். எனவே, மகளை இனி பார்க்க கூடாது, பேசக்கூடாது” என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சந்தானம், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் நேற்று காலை கியாஜூதீன் வேலைக்கும், சர்மிதா பாலிடெக்னிக்குக்கும் சென்று விட்டனர். வீட்டில் தவ்ஹீத்நிஷா மட்டும் தனியாக இருந்தார். இந்த நேரத்தில் சந்தானம், தனது நண்பருடன் வந்துள்ளார். சர்மிதாவை திருமணம் செய்துதருமாறு மீண்டும் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சந்தானம், தவ்ஹீத் நிஷாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர், அலறியவாறு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து இருவரும் தப்பி ஓடினர்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஓட்டேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், ஓட்டேரி சப் இன்ஸ்பெக்டர் ரகுநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அப்போது தவ்ஹீத் நிஷா இறந்தது தெரிய வந்தது. அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தலைமறைவான சந்தானம், அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். பொறியியல் கல்லூரி வளாகத்தில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக