கல்லூரி மாணவியின் காதலால் ஏற்பட்ட விபரீதத்தால் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து அம்மா, மகன், மகள் என 4 பேர் தற்கொலை செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ளது கூடல்நகர். கடற்கரையையொட்டி உள்ளது. இந்த ஊரைச்சேர்ந்தவர் ராமச்சந்திரன்(55).
இவரது மனைவி இந்திராகாந்தி(50). இவர்களது மகன்கள் குணசேகர்(27), முத்துகிருஷ்ணன்(24), ராமகிருஷ்ணன்(22). மகள்கள் விஜி என்ற லதா(20), ரேணுகா(18). யாருக்கும் திருமணம் ஆகவில்லை. கடந்த 4 ஆண்டுக்கு முன் கோவை மாவட்டம் உடுமலை சென்று அங்கு மளிகைகடை ஆரம்பித்தனர். ஒட்டுமொத்த குடும்பமே ஊடுமலையில் இருந்தபோதிலும் ராமச்சந்திரன் மட்டும் அடிக்கடி ஊருக்கு வந்து செல்வார்.
இதற்கிடையில் கல்லூரியில் படித்து வந்த விஜிக்கு தந்தையின் உறவினர் மகனுடன் காதல் ஏற்பட்டது. இது வீட்டுக்கு தெரியவரவே, அவர்கள் உறவு பையன்தானே பேசி முடித்து விடலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் காதலனின் பெற்றோருக்கு இது பிடிக்கவில்லை. அவர்கள் தட்டிக் கழித்து வந்தனர்.
இதனால் ராமச்சந்திரனின் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. தங்கையின் காதல் விவகாரத்தால் மனமுடைந்த குணசேகர் 8 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலை அருகே காட்டுப்பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து மகள் விஜியை அழைத்துக்கொண்டு இந்திராகாந்தி ஊருக்கு வந்துவிட்டார். உடன்குடியில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோர்ஸ்சில் விஜி வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் அவரது தாய் ‘உன் காதல் விவகாரத்தால்தான் அண்ணனும் தற்கொலை செய்தான். உன்னால் தான் எல்லா பிரச்னையும் வருகிறது‘ என்று அடிக்கடி திட்டியுள்ளார். இதனால் விஜி மனமுடைந்தார்.
தாயிடம் எதும் பேசாமல் கடைக்கு சென்றுவிட்டார். அங்கு யாரும் இல்லாதநேரம் பார்த்து விஷம் குடித்து இறந்தார். தகவல் அறிந்து உடுமலையில் உள்ள மகன்கள், மகள் மற்றும் தந்தை ஆகியோர் நேற்று முன்தினம் ஊருக்கு வந்தனர்.
விஜியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். இந்நிலையில் அன்று நள்ளிரவு, இந்திராகாந்தி, ரேணுகாதேவியை அழைத்துக் கொண்டு இயற்கை உபாதையை கழிக்க கடற்கரைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை.
நேற்று காலை வீட்டில் உள்ளவர்கள் கண்விழித்து பார்த்தபோது தாய், மகளை காணாது திடுக்கிட்டனர். இதைத்தொடர்ந்து மகன் முத்துக்கிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் கடற்கரை பகுதிக்கு சென்றனர்.
அங்கு ரேணுகா மற்றும் இந்திராகாந்தியின் உடல்கள் ஒதுங்கிக் கிடந்தன. தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. காதல் விவகாரத்தால் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக