தாய்மை என்பது பெண்ணுக்கு அளிக்கப்பட்ட வரம். பெண்களுக்கு பெருமையை தருகின்ற கருப்பையில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் பெண்களை மிரட்டி வருகின்றன. கருத்தடை முறைகள், மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கிருமித் தொற்று போன்ற காரணங்களால் கருப்பை வாய் மற்றும்
கருப்பை புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
ஆரம்ப அறிகுறிகளை கண்டுபிடித்து சிகிச்சை செய்தால் கருப்பை புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் கல்பனா சம்பத்.
வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச் சூழல் மாசு, பரம்பரைக் காரணங்களால் கருப்பை, கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்படலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின்னர் புற்று நோய்க்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது. தற்போது 30 வயதிலேயே பலர் பாதிப்புக்கு ஆளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் பெண்கள் திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் முதலே கருப்பை பகுதியில் புற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை ஆண்டு தோறும் சோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.கருப்பையில் புற்றுநோய் ஏற்பட எச்.பி.வி. வைரசும் காரணம் என கண்டறிப்பட்டுள்ளது. கேன்சர் உருவாக 80 சதவீதம் வரை எச்.பி.வி. வைரஸ் முக்கிய காரணமாகிறது.
இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசியும் கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் திருமணம் முடிந்து 5 ஆண்டுகளில் இருந்து இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.குறிப்பிட்ட இடைவெளியில் பேப்ஸ்மியர் டெஸ்ட் மூலம் கருப்பை வாயில் புற்றுநோய்க்கான அறிகுறி தென்படுகிறதா என சோதிக்க வேண்டும்.
கருப்பை புற்று நோய் இருக்கும் பட்சத்தில் சில அறிகுறிகள் தென்படலாம். உறவின் போதோ அல்லது அதற்குப் பின்னரோ ரத்தம் வெளிப்படுதல், வெள் ளைப் படுதல் அதிகம் இருக்கலாம். வெள்ளைப்படுதலுடன் சிறிது ரத்தம் கலந்து வரலாம். இரண்டு மாதவிடாய்க்கு இடையில் அடிக்கடி ரத்தம் வெளிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கருப்பைப் புற்று நோய்க்கான பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
பயாப்சி மற்றும் பேப்ஸ்மியர் சோதனைகள் மூலம் புற்று நோய் கண்டறியப்படுகிறது. புற்று நோய் ஆரம்பிக்கும் சமயத்தில் கண்டறிந்தால் கருப்பையை அகற்றுவதன் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். நோய் பரவிய பின்னர் தாமதமாக கண்டறியப்படும் போது ரேடியோ தெரபி மற்றும் ஹீமோ தெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும். வந்த பின் தவிப்பதைவிட வரும் முன்னர் கண்டறிந்து தடுப்பதே சிறந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக