பிரித்தானியாவில் காஸி என்னும் 5 பிள்ளைகளின் தாயை அவர் வளர்ப்பு நாயே கடித்துக் குதறிக் கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை அவர்கள் வசித்துவந்த தொடர்மாடி வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் திடீரென மூத்த மகள் மீது
பாய்ந்து தாக்க ஆரம்பித்துள்ளது.
இதனைத் தடுக்க அந்தத் தாய், நாய் மீது விழுந்து தனது முதலாவது குழந்தையைக் காப்பாற்றி உள்ளார். இருப்பினும் அந்த நாய் திரும்பவும் இளைய மகளை தாக்க ஆரம்பித்துள்ளது.
இதனை அடுத்து அவர் மீண்டும் போராடி தனது இளைய மகளைக் காப்பாற்றியுள்ளார். இருப்பினும் அந் நாய் திடீரென சற்றும் எதிர்பார்க்காத வகையில், அம்மாவைத் தாக்க முற்பட்டுள்ளது.
அலிசேஷன் இனத்தைச் சேர்ந்த அந்த நாயின் கூரிய பற்கள் காஸியின் தொண்டைப் பகுதியை பதம் பார்த்துள்ளது. சில நிமிடங்களிலேயே அவர் துடிக்கத் துடிக்க ரத்தவெள்ளத்தில் மூழ்கி இறந்துபோனார்.
செய்வதறியாது கூச்சலிட்ட 5 பிள்ளைகளும், ஒருவாறு கதவைத் திறந்துகொண்டு அடுத்த வீட்டிற்குச் சென்று உதவி கோரியுள்ளனர். பக்கத்து வீட்டு நபர் உடனடியாகச் சென்று பார்த்தபோது அங்கே ரத்தவெள்ளத்தில் தாயார் மூழ்கிக் கிடந்துள்ளார்.
அவர் இறந்த பின்னர் கூடவும் முகத்தை அந்த அலிசேஷன் நாய் கடித்து குதறிக் கொண்டு இருந்திருக்கிறது. தன் பிள்ளைகளின் உயிரைக் காக்க தன் உயிரைப் பணையம் வைத்த காஸி மிகவும் துணிச்சலான ஒரு பெண் என அயலவர்கள் தெரிவித்தனர்.
தற்போது தமது தாயை இழந்து தவிக்கும் 5 பிள்ளைகளும், உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாக மேலும் அறியப்படுகிறது. 3 வயதாகும் குறிப்பிட்ட அந்த அலிசேஷன் நாய் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே காஸியால் வாங்கி வளர்க்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுபோன்ற கோரமான நாய்களை பிரித்தானிய அரசு வீட்டில் வளர்ப்பதற்கு எவ்வாறு அனுமதிக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக