புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கங்காதேவி பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்த சந்தனு, பெண்ணே! நீ கன்னியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு அழகுக்கன்னியை நான் என் வாழ்நாளில் பார்த்ததும் இல்லை. நான் இந்த பூவுலகில் மிகச்சிறந்த அரசன். உன்னை மணந்து கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறது. நீ யாராக
இருந்தாலும் பரவாயில்லை. நீ எனக்கு வேண்டும். என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? என்று சங்கோஜத்துடன் கேட்டான்.அதைக்கேட்டு வெட்கப்பட்ட கங்காதேவி தலை குனிந்து நின்றாள். மவுனமொழி சம்மதத்துக்கு அறிகுறி என்பதைப் புரிந்து கொண்ட சந்தனு, பெண்ணே! உன் மவுனத்தைக் கலைத்து நேரடியாக பதில் சொல், என்றான். அவள் சந்தனுவிடம், மன்னா! உம்மைத் திருமணம் செய்து கொள்ள நான் சம்மதிக்கிறேன். ஆனால், எனது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். அதற்கு சம்மதமென்றால், திருமண ஏற்பாடுகளைச் செய்யலாம், என்றாள். அவளது அழகில் லயித்துப் போயிருந்த சந்தனு, அவள் விதித்த நிபந்தனைகளைக் கேட்டான். மன்னா! நான் உம் மனைவி யான பிறகு, நான் என்ன செய்தாலும் கேள்வி கேட்கக்கூடாது. அதாவது, நான் உம் மனம் கஷ்டப்படும்படி நடந்தாலும் என்ன ஏதென்று கேட்கக்கூடாது. உலகமே வெறுக்கும் காரியத்தைச் செய்தாலும் ஏன் செய்தாய் என்ற கேள்வி எழக்கூடாது, என்றாள்.மன்னனுக்கு இவற்றை ஏற்பதா வேண்டாமா என்று குழப்பம் இருந்தாலும், பெண்ணாசையின் பிடியில் சிக்கியிருந்த அவன் சரியென சம்மதித்து விட்டான். மகாபாரதத்தின் துவக்கமே மனிதகுலத்துக்கு பாடம் கற்றுத்தருவதாக அமைந்திருப்பதை கவனியுங்கள். பெண்ணாசைக்கு ஒருவன் அடிமையாகக் கூடாது. அப்படி அடிமையாகி விட்டால், அவன் படப்போகும் துன்பங்களின் எல்லைக்கு அளவிருக்காது. இதோ! சந்தனு தன் அழிவின் முதல் கட்டத்தில் அடியெடுத்து வைக்கப்போகிறான். கங்கா! கலங்காதே, நீ என்ன சொன்னாலும் கேட்பேன். நீ நாட்டைக் கேட்டால் உன் பெயரில் எழுதி வைக்கிறேன். அரச செல்வம் உன்னுடையது. நீ என்ன சொல்கிறாயோ, அதன்படி நடக்கிறேன், எனச் சொல்லி அவள் முன்னால் மண்டியிட்டு நின்றான்.

சந்தனு வார்த்தை மாறமாட்டான் என்பதைப் புரிந்து கொண்ட கங்கா, அவனைத் திருமணம் செய்து கொண்டாள். உலகிலேயே சிறந்த அந்த அழகியை அனுபவிப்பதில் மட்டுமே சுகம் கண்ட சந்தனு, ராஜ்ய விஷயங்களைக் கூட மறந்து விட்டான். எல்லாம் கங்காவின் இஷ்டப்படியே நடந்தது.இந்த நிலையில் கங்காதேவி கர்ப்பமானாள். சந்தனுவுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. அவளைக் கண்ணைப் போல் பாதுகாத்தான். அவளது உடல் அதிரக்கூடாது என்பதற்காக மலர்களை பரப்பி அதில் நடக்க வைத்தான். பிரசவ நாள் வந்தது. கங்கா அழகான ஆண்மகனைப் பெற்றாள். சிறிதுநாள் கடந்ததும், குழந்தையை கங்கா எடுத்துக் கொண்டு கங்கைக்கு சென்றாள். இவள் யாரிடமும் சொல்லாமல் எங்கே போகிறாள் என சந்தனு பின்னால் சென்றான். அவள் செய்த செயலைப் பார்த்து அதிர்ந்து நின்று விட்டான். அதுவரை இனிய மொழி பேசும் கிளியாக, சாந்தமே வடிவமாகத் திகழ்ந்த கங்கா, இப்போது அரக்கியாகத் தெரிந்தாள். ஆம்...பெற்ற குழந்தையை ஆற்றில் வீசி எறிந்தவளை என்ன சொல்வது? ஆத்திரத்தின் விளிம்பிற்கே போன சந்தனுவிடம் அவனது இதயம் பேசியது. சந்தனு நில்! நீ காம வயப்பட்டு, இவளை மணந்தாய். இவள் தன்னை மணக்கும் முன், நான் என்ன செய்தாலும், கேள்வி கேட்கக்கூடாது. அது கொடூரமான செயலாக இருந்தாலும் சரி... என சொன்னாள் அல்லவா? இப்போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு, அவளைக் கேட்கப் போகிறாய்? என்றது.சந்தனு சூழ்நிலைக் கைதியாய் நின்றான். ஏதும் பேசாமல் திரும்பிய அவன், சில நாட்களில் எல்லாவற்றையும் மறந்தான். மீண்டும் கங்காவின் பிடியில் சிக்கினான். அவள் வரிசையாய் ஆறு பிள்ளைகளைப் பெற்றாள். ஆறு குழந்தைகளையும் தண்ணீரில் வீசினாள். அவளைக் கேள்வி கேட்க முடியாமல் தவித்த சந்தனு, எட்டாவது ஆண்குழந்தை பிறந்ததும் கங்கா அதைத் தூக்கிக் கொண்டு கங்கை நதிக்கு போவதைப் பார்த்தான்.

கொடியவளே! நில். இந்த குழந்தையையும் கொல்லப் போகிறாயா? உன்னைக் கேள்வி கேட்கக்கூடாது என்ற நிபந்தனை இத்தனை நாளும் என்னைத் தடுத்தது. நானும் போகட்டும், போகட்டும் என பார்த்தால், உன் கொடூரம் எல்லை மீறி விட்டது. பெற்ற குழந்தைகளைக் கொல்லும் கொடூரக்காரியான உன்னை திருமணம் செய்ததற்காக வெட்கப்படுகிறேன். குழந்தையைக் கொடுத்து விடு, என்றான். இதைக் கேட்டு கங்காவின் கண்கள் கொவ்வைப்பழமாகச் சிவந்தன. மன்னா! நன்றாக இருக்கிறது நீ கேட்பது! நான் என்ன செய்தாலும் கேள்வி கேட்க மாட்டேன் என்ற நிபந்தனைக்கு கட்டுப்பட்டு தானே என்னை மணம் முடித்தாய். ஏழு குழந்தைகளைக் கொல்லும் வரை ஏன் இப்படி செய்தாய் என்று கேட்காத நீ, இப்போது கேள்வி கேட்கிறாய். ஏனென்றால், பெற்ற பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விட காமமே உன் மனதில் நிரம்பி நின்றது. அன்று கேளாதவன் இப்போது கேள்வி கேட்கும் உரிமையை எப்படி எடுத்துக் கொண்டாய். நான் சில காரணங்களால் இப்படி குழந்தைகளைக் கொல்கிறேன். அதைக் கேட்டால் நீ இதை விட அதிர்ச்சியடைவாய். நான் தேவலோகத்து கங்காதேவி, நான் இந்த பூமிக்கு வந்து, இந்தக் குழந்தைகளைக் கொன்றதற்கான காரணத்தைக் கேள், என்று சொல்லி தன் கதையை ஆரம்பித்தாள். அவள் சொல்லச் சொல்ல சந்தனு மயிர்க்கூச் செறிய நின்றான்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top