பிறந்த குழந்தைகளுக்கு அத்தியாவசியமான உணவு தாய்ப்பால். தாய்மையும், தாய்பாலும் பெண்களுக்கு இறைவன் அளித்த சிறப்பான வரம். அதனால்தான் வெறுமனே இருந்த மார்பில் குழந்தை பிறந்த நொடியில தாய்ப்பால் சுரக்கிறது. இதனை உடனடியாக குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நீர்மத் தங்கம்
குழந்தை பிறந்த உடன் சுரக்கும் தாய்ப்பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனை நீர்மத்தங்கம் என்று அழைக்கின்றனர். இதில் உயர்தர ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. எனவேதான் பிறந்த குழந்தைக்கு உடனே இந்த தாய்ப்பாலை கொடுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகிவிடும். இது தவிர குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, ஒவ்வாமை, டைப் 2 நீரிழிவு, உடல்பருமன் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது.
ஆரோக்கியம் அவசியம்
குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்புக்காக அந்தப் பெண் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.
சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாய் எடுத்து வந்தால்தான், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.
அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும். தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும்.
தாய்ப்பால் சுரப்பு
தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை. சில பெண்களுக்கு மார்பகம் பெரியதாக இருக்கும். ஆனால், தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு மார்பகம் சிறியதாக இருக்கும். அதேநேரம், தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட ஒரு பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடும்.
சில தாய்மார்களுக்கு குழந்தை பெற்றெடுத்த சில நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பு வெகுவாக குறைந்து விடும். இதற்கு காரணம் அவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளாததும், ஹார்மோன் சுரப்பு குறைபாடும்தான்.
தாய்க்கும் நன்மைகள்
தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. குழந்தையை நெருக்கமாக வைத்திருப்பதன் மூலம் ஆக்ஸிடோசின் சுரக்கிறது. இதனால் தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கிறது.
தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு டைப் 2 நீரிழிவு, மனஅழுத்தம், மார்பகப்புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுவதில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள். எனவே ஆறுமாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், சேய்க்கும் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக