பிளஸ்டூவில் 1148 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை அவரது பேஸ்புக் நண்பர் நேரில் வந்து பாராட்டினார். இதை மாணவியின் தாயார் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவி மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார். தற்போது
படுகாயத்துடன் அந்த மாணவி உயிருக்குப் போராடி வருகிறார். தான் பாராட்டியதால் இவ்வளவு பெரிய விபரீதமா என்ற மன உளைச்சலில் அந்த பேஸ்புக் நண்பர் மாணவியைக் காப்பாற்ற கடவுளிடம் வேண்டி வருகிறார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள் மிஸ்ரா பிரியதர்ஷினி. 17 வயதாகும் இவர் பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தார். பிரமாதமாக படிக்கும் பிரியதர்ஷினி தேர்வில் 1148 மதிப்பெண்களை அள்ளியிருந்தார். எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர ஆர்வமாக இருந்து வந்தார்.
பிரியதர்ஷினிக்கு பேஸ்புக் மூலம் பிரதீஷ் என்பவர் நண்பராக இருந்தார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். நேற்று பிரியதர்ஷினியை நேரில் சந்தித்து அதிக மார்க் வாங்கியதற்குப் பாராட்டு தெரிவிப்பதற்காக வீட்டுக்கு வந்தார் பிரதீஷ். அப்போது வீட்டில் பிரியதர்ஷினி மட்டுமே இருந்துள்ளார். மற்றவர்கள் வெளியே போயிருந்தனர்.
இதையடுத்து பிரதீஷை வரவேற்று வீட்டுக்குள் அமர வைத்து பேசிக் கொண்டிருந்தார் பிரியதர்ஷினி. இந்த நிலையில், பிரியதர்ஷினியின் தாயார் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது யாரோ ஒருவருடன் தனது மகள் அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் யார் அது என்று கேட்டுள்ளார்.
அதற்கு பிரியதர்ஷினி இவர் எனது பேஸ்புக் நண்பர் என்று கூறி பிரதீஷை அறிமுகப்படுத்தினார். ஆனால்அதைப் பொருட்படுத்தாத அவரது தாயார், ஏன் இப்படி வீட்டுக்குள் அனுமதித்தாய் என்று கூறி கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி வேகமாக தனது வீட்டின் 2வது மாடிக்குப் போய் அங்கு அமர்ந்து நீண்ட நேரம் அழுதுள்ளார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்து விட்டார்.
கீழே விழுந்க வேகத்தில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு விட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் மிதந்தார். அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினியின் குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், பிரதீஷை அழைத்து விசாரித்தனர். அவர் அப்போது பெரும் அதிர்ச்சியுடன் இருந்துள்ளார். 3 நாட்களுக்கு முன்புதான் பிரியதர்ஷினி பிரதீஷுக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளாராம். நல்ல மதிப்பெண் பெற்ற அவரை நேரில் பாராட்டுவதற்காக வந்த நேரத்தில் இப்படி ஒரு விபரீதம் நடந்து விட்டதால் அதிர்ச்சியுடன் உள்ளார் பிரதீஷ்.
பிரியதர்ஷினி பத்திரமாக திரும்ப வேண்டும், உயிர் பிழைக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திப்பதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக