டிப்பர் வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு 2 வயதுக்குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்தது. இந்தச் சோகச் சம்பவம் நேற்றுக்காலை பளை, கரந்தாய் பகுதியில் இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த திருச்செல்வம் கோபிகா (வயது 2) என்ற பெண் குழந்தையே இவ்வாறு மரணமானது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
பளை, கரந்தாய் பகுதியில் நேற்றுக்காலை 7 மணியளவில் மரணமான குழந்தையின் தாய் வேலைக்குச் சென்ற சாரதியான தனது கணவனுக்குக் காலை உணவைக் கொடுத்து விடுவதற்காக வீதியால் வந்து கொண்டிருந்த தனக்குத் தெரிந்த “டிப்பர்’ வாகனம் ஒன்றை வழிமறித்துள்ளார்.
அந்த வாகன சாரதியிடம் தனது கணவருக்கான உணவுப் பார்சலை அவர் கையளித்துள்ளார். இந்த வேளையில் அவரது இரண்டு வயதுப் பெண் குழந்தையான கோபிகா “டிப்பர்’ வானத்தின் சில்லுக்கு மிக நெருக்கமாகப் போய் நின்றுள்ளார். இதனைக் குழந்தையின் தாயோ, சாரதியோ அவதானிக்கவில்லை.
பார்சலைப் பெற்றுக்கொண்ட “டிப்பர்’ வாகனச் சாரதி அதனை முன்னே செலுத்திய போது குழந்தை சில்லுக்குள் அகப்பட்டுப் பரிதாபகரமாக மரணமாகியுள்ளது.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிப் பொலிஸார் “டிப்பர்’ சாரதியைக் கைது செய்ததுடன் வாகனத்தையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக