இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவராக உள்ள சோலை கண்ணன், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது: நான் மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ளதற்கு தொடர்ந்து எதிர்ப்பு
தெரிவித்து வருகிறேன்.கடந்த மாதம் 12ம் திகதி மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் என்னை மடத்திற்கு அழைத்தார். அங்கு அருணகிரிநாதருடன் நித்தியானந்தாவும் இருந்தார்.
அப்போது அருணகிரி நாதர் என்னிடம் மதுரை ஆதீன மடத்திற்கென்று தனி புகழ் உள்ளது. பிரச்சினைகள் செய்ய வேண்டாம். நித்தியானந்தா மிகவும் ஒழுக்கமானவர். புனிதமானவர் என்று கூறினார்.
அப்போது அவரிடம், நான் மடத்திற்கு எதிரானவன் அல்ல. ஆதீன மரபுபடி நித்தியானந்தா மொட்டையடித்து உங்களுக்கு கீழ் பணி செய்தால் அதை நான் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன் என்று கூறினேன்.
பின்னர் ஆதீன மடத்தின் மாடியில் நடைபெறும் பஜனையில் கலந்து கொள்ள என்னை அழைத்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.இதில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி மற்றும் சீடர்கள் கலந்து கொண்டனர்.
அந்த சமயத்தில் என்னிடம் அங்கிருந்த சீடர்கள் புனித நீர் என்று கூறி ஒரு டம்ளரில் தண்ணீர் கொடுத்தனர். அதை குடித்த எனக்கு சிறிது நேரத்தில் மயக்கம் வந்தது போல உணர்வு ஏற்பட்டது.
அந்த தண்ணீரை குடித்த சீடர்கள் உட்பட அனைவரும் மயக்க நிலையில் இருந்தனர். அந்த நேரத்தில் புலித்தோல் விரிக்கப்பட்டது. அதில் யானை தந்தம், மான் கொம்புகள் பரப்பப்பட்டது.
அப்போது நித்தியானந்தாவின் பாடல்கள் ஒலிபரப்பானது. நடிகை ரஞ்சிதா மயக்க நிலையில் நித்தியானந்தா அருகிலேயே நடனமாடி கொண்டிருந்தார்.
வைஷ்ணவியும், பெண் சீடர்களும் அருவறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டனர். மதுரை ஆதீன மடத்தை களங்கப்படுத்தும் முயற்சி நடக்கிறது.
ஆபாச நடனங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என நான் விளக்குத்தூண் பொலிஸில் கடந்த மாதம் 15ம் திகதி புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ஏ.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இந்த புகார் தொடர்பாக தமிழக பொலிஸ் டி.ஜி.பி., மதுரை பொலிஸ் கொமிஷனர், விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர், நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தர விட்டார். இந்த வழக்கை வருகிற 22ம் திகதிக்கு தள்ளி வைத்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக