புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அரியானா மாநிலம் குர்கான் மாவட்டம் மானோசர் அருகில் உள்ள கோ கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மகி. கடந்த புதன்கிழமை இவளுக்கு பிறந்தநாள்.அன்று பெற்றோர் வாங்கிக் கொடுத்த புத்தாடை அணிந்து கொண்டாடினார். இரவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தாள்.
இரவு 11 மணி அளவில் திடீர் என்று வீட்டின் அருகே மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுமி மகியின் அழுகுரல் கேட்டது. உடனே பெற்றோரும் கிராம மக்களும் பதறியடித்து ஓடினார்கள்.

சிறுமி மகி குழிக்குள் விழுந்து விட்டது தெரிய வந்தது. அது 68 அடி ஆழ குழாய் கிணறு ஆகும் தண்ணீர் இல்லாததால் பயனற்றதாக கருதி அதை மூடாமல் அப்படியே விட்டு விட்டனர். அதற்குள் சிறுமி விழுந்து விட்டதால் மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது.

விழுந்த 2 மணி நேரம் வரை சிறுமியின் அழு குரல் வெளியே கேட்டது. அதன் பிறகு குரல் அடங்கி விட்டது. சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க குழாய்க்குள் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. குழிக்குள் சி.சி.டி.வி. கேமராவை செலுத்தி கண்காணித்தனர்.

இதில் சிறுமியின் உடலில் அசைவு இருப்பதையும், அவள் தலைகீழாக விழாமல் நேராக விழுந்து இருப்பதும், பாறையின் இடுக்கில் சிக்கி இருப்பதும் தெரியவந்தது. சிறுமியை மீட்பதற்காக அருகே வேறொரு குழி தோண்டும் பணி நடந்தது.

ஆனால் கடுமையான பாறையாக இருந்ததால் மற்றொரு இடத்தில் ராட்சத எந்திரங்கள் மூலம் குழி தோண்டப்பட்டது. இதனால் தாமதம் ஏற்பட்டது. ராணுவ வீரர்களுக்கு உதவியாக டெல்லி மெட்ரோ ரெயில் தொழில்நுட்ப குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். குழி தோண்டும்போது மண்சரிவு போன்ற பாதிப்பு ஏற்படாமல் இருக்க அருகில் குடியிருப்புகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

3 நாட்கள் இரவு-பகலாக குழி தோண்டும் பணி நடந்தது. 80 மணி நேர போராட்டத்துக்குப்பின் சிறுமி இருப்பிடத்தை மீட்பு குழுவினர் அடைந்தனர். இதற்காக புதிதாக தோண்டப்பட்ட குழியில் இருந்து சிறுமி விழுந்து கிடக்கும் குழிக்கு சுரங்கம் தோண்டப்பட்டது. அதன் வழியாக ராணுவ வீரர்கள் உள்ளே சென்று சிறுமியின் இருப்பிடத்தை அடைந்தனர்.

அதன்பிறகு சிறுமியை மீட்டு வெளியே கொண்டு வரும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சிறுமி குழிக்குள் விழுந்து 80 மணி நேரம் ஆகிவிட்டதால் அவளது கதி என்ன? என்று தெரியாததால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை மேலே கொண்டு வருவதற்காக விசேஷ கிரேன் எந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. அதில் வைத்து ராணுவ வீரர்கள் மேலே தூக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எந்த நேரத்திலும் சிறுமி மீட்கப்பட்டுவாள். ஆனால் அவளது உடல்நிலை பற்றி தகவல் தெரியவில்லை. இதையடுத்து அங்கு ஆம்புலன்சுடன் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சிறுமி மீட்கப்பட்டதும் உடனே முதல் உதவி சிகிச்சை அளிக்கவும், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழிக்குள் சிறுமி விழுந்த தகவல் நாடு முழுவதும் பெண்கள், சிறுவர்-சிறுமிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் சிறுமி மீட்கப்பட்டாளா? என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். சிறுமி உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் பல இடங்களில் பிரார்த்தனை கூட்டங்கள் நடந்தன.


இந்நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கிணற்றிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட மாஹி பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. மாஹி உயிருடன் மீட்கப்படுவார் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் உயிரிழந்த செய்தி அறிந்து பெரும் சோகம் அடைந்தனர்.


இதுபோல் மூடப்படாத குழாய் கிணறுகளால் அடிக்கடி சிறுவர்-சிறுமிகள் உள்ளே விழுந்து உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இனி இதுபோன்று நிகழாமல் இருக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய சிறுவர்கள் உரிமை பாதுகாப்பு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் பேரில் குழாய் கிணறுகளை தோண்டவும், பயனற்ற குழாய்களை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரியானாவில் ஏற்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக அம்மாநில அரசிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது. சிறுமி மகி விழுந்த குழாய் கிணறை தோண்டிய உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள்.

சிறுமி மகியின் தந்தை நீரஜ் உபாத்யாய். இவர் மானேசரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பாதுகாப்பு சூப்பர்வைசராக வேலை பார்க்கிறார். கோ கிராமத்தில் மனைவி சுமன், மகள் மகி ஆகியோருடன் வசித்து வந்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top