நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மாவடிக்கால் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி என்ற தர்மர் (வயது65). இவரது மனைவி அய்யம்மாள் (57) இவர்களுக்கு மணிகண்டன் என்ற மகனும், சண்முகத்தாய் (28) என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் திருமணமாகி பெற்றோருடன் வசித்து
வந்தான்.
மகள் சண்முகத்தாய்க்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்லத்துரை என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் சண்முகத்தாய் சில ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டார். அப்போது சங்கர் என்ற வாலிபருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதற்கு மணிகண்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் சண்முகத்தாய், சங்கருடன் வீட்டை விட்டு வெளியேறி பாளையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் சண்முகத்தாயுடன் பேசக்கூடாது, அவளை வீட்டுக்கு வரவிடக்கூடாது என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் தர்மரும் அய்யம்மாளும் மகன் மணிகண்டனுக்கு தெரியாமல் மகளை சந்தித்து அவளுக்கு பண உதவிகள் செய்து வந்தனர்.
இந்த விவகாரம் மணிகண்டனுக்கு தெரியவந்தது. இதனால் மணிகண்டனுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மணிகண்டனின் பெற்றோரிடம் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதற்காக ரூ.5 லட்சம் இருந்துள்ளது. இந்த ரூ.5 லட்சத்தையும் அவர்கள் மகள் சண்முகத்தாய்காக செலவு செய்து விட்டனர்.
இதுகுறித்து நேற்று மணிகண்டனும் அவரது உறவினர் மாயாண்டி, நண்பர் ராஜ் ஆகியோர் தர்மரிடம் கணக்கு கேட்டனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டன் அரிவாளால் சரமாரியாக தர்மரை வெட்டி உள்ளார். அதை தடுத்த தாய் அய்யம்மாளுக்கும் வெட்டு விழுந்தது. இதில் தர்மர் அய்யம்மாள் ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.
மணிகண்டனும், அவருடன் சேர்ந்தவர்களும் தப்பி ஓடி விட்டனர். பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவன், முத்துசெல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது மேற்கண்ட “திடுக்” தகவல்கள் கிடைத்தன.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மணிகண்டனையும், அவருடன் சேர்ந்தவர்களையும் தேடி வருகிறார்கள். இதில் இன்று மாயாண்டி, ராஜ் ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக