போலீஸ் என்று கூறி பலரிடம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். விபசாரம், திருட்டில் ஈடுபட்டு வந்தவர், காதலன் கொடுத்த ஐடியாவால் போலீஸ் கெட்டப்பில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. காஞ்சிபுரம் மாவட்டம்
மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது மனைவியின் தங்கை பேபி. சில மாதங்களுக்கு முன்பு சென்னை கடற்கரைக்கு சென்ற பேபியுடன் வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த ரோகிணி (24) என்பவர் அறிமுகமானார். தன்னை பெண் போலீஸ் என கூறிய ரோகிணி, வேலூர் ஆயுதப்படையில் வேலை பார்ப்பதாகவும், சென்னையில் பாதுகாப்பு பணிக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். செல்போனில் போலீஸ் உடையில் துப்பாக்கி ஏந்தியபடி இருக்கும் போட்டோவையும், அடையாள அட்டையையும் காட்டியுள்ளார்.
பின்னர் இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். பேபியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் அளவுக்கு நட்பு வளர்ந்துள்ளது. அப்போது வெங்கடேசனிடமும் ரோகிணிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவசர செலவுக்கு தேவைப்படுவதாக கூறி அவரிடம் அவ்வப்போது பணம் வாங்கியுள்ளார். 2 மாதங்களில் ரூ.25 ஆயிரம் வரை கடன் வாங்கியுள்ளார். பல நாட்கள் ஆகியும் பணத்தை திருப்பி தரவில்லை. வெங்கடேசன் வேலூருக்கு வந்து விசாரித்தபோதுதான் ரோகிணி போலீஸ் இல்லை என்பதும், பணத்தை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து வேலூர் எஸ்.பி.யிடம் வெங்கடேசன் நேற்று முன்தினம் புகார் செய்தார். எஸ்.பி. கயல்விழி உத்தரவின்பேரில் பாகாயம் எஸ்.ஐ. தீபா வழக்கு பதிவு செய்து, தொரப்பாடியில் தங்கியிருந்த ரோகிணியை நேற்று கைது செய்தார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள்: ரோகிணிக்கு சில தவறான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அதனால் அவரும் தடம் மாறினார். பலமுறை கண்டித்தும் அவர் திருந்தாததால் பெற்றோரும் உறவினரும் விரட்டிவிட்டனர். சுதந்திரம் கிடைத்ததாக நினைத்த ரோகிணி, விபசாரம், திருட்டுகளில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை அருகே உள்ள செல்போன் நிறுவனத்தில் சில ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார். அப்போது ஒரு வாலிபருடன் ரோகிணிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. போலி பெண் போலீஸ் ஐடியாவை அவரது காதலன்தான் கொடுத்துள்ளார். போலீசில் வேலை பார்ப்பதாக கூறினால் ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாம் என்று காதலன் கொடுத்த ஐடியாவை நம்பிய ரோகிணி, மோசடியில் ஈடுபட்டுள்ளார். கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு சினிமா ஷுட்டிங் வாடகை நிறுவனத்தில் இருந்து போலீஸ் யூனிபார்ம், துப்பாக்கியை வாங்கி, அதை அணிந்து செல்போனில் போட்டோ எடுத்துள்ளார்.
போலியாக அடையாள அட்டையும் தயாரித்து வைத்துள்ளார். செல்போனில் உள்ள போட்டோவை காட்டி, வெங்கடேசனின் குடும்பத்தை ஏமாற்றியுள்ளார். தொரப்பாடி பகுதி மக்களும் அவரை போலீஸ் என்றுதான் நம்பியிருந்தனர். கைது செய்யப்பட்ட பிறகுதான் ரோகிணி போலீஸ் இல்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக