நெல்லை மாவட்டம் தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. கூலி தொழிலாளியான இவரது மகள் ராதிகா (வயது14) ராஜா சில ஆண்டுக்கு முன்பு குடும்பத்துடன் மும்பை சென்று விட்டார்.மும்பையில் உள்ல பள்ளியில் ராதிகா 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சமீப காலமாக ராஜாவின்
போக்கில் மாற்றம் ஏற்பட்டது. வீட்டில் பெற்ற மகள் என்றும் பாராமல் ராதிகாவிடம் செக்ஸ் டார்ச்சர் கொடுக்க தொடங்கினார். ராதிகாவால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை.
“இதை வெளியில் சொன்னால் உன்னை கொன்று நானும் தற்கொலை செய்வேன்” என்று ராஜா மிரட்டினார். ராஜாவின் மிரட்டலுக்கு பயந்து ராதிகா எதுவும் பேசாமல் இருந்து விட்டார். நாளுக்கு நாள் ராஜாவின் டார்ச்சர் அதிகமானது.வேதனை தாங்காத ராதிகா நடந்த விவரத்தை தனது பள்ளி தோழிகளிடம் அழுது கொண்டே கொட்டி தீர்த்தார். தோழிகள் இதை மெல்ல வீட்டில் கூறினர். விஷயத்தை புரிந்து கொண்ட ராதிகாவின் பக்கத்து வீட்டு பெண் ராதிகாவுக்கு உதவ முன்வந்தார்.
அந்த பெண்ணின் ஆலோசனைப்படி ராதிகா கடந்த வாரம் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் ரெயிலில் ஏறி சொந்த ஊரான நெல்லைக்கு வந்தார். நெல்லையில் உள்ள காப்பகத்தில் அவர் தஞ்சம் அடைந்தார். தனக்கு நேர்ந்த கொடுமையை காப்பகத்தில் சொல்லி அழுத ராதிகா தான் தொடர்ந்து படிக்க விரும்புவதாக கூறினார். அதை ஏற்று அவரை படிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே ராஜா தனது மகளை சிலர் நெல்லைக்கு கடத்தி வந்து விட்டதாக மும்பை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மும்பை போலீசார் நெல்லை வந்து விசாரணை நடத்தினர். காப்பகத்தில் விசாரித்த போது ராதிகா தனது தந்தையிடம் செல்லமாட்டேன் என்று பிடிவாதமாக கூறினார்.
இந்த நிலையில் ராஜா தனது மகளை ஒப்படைக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் ஹேபிபஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கோர்ட்டில் நடந்தது. முதல்கட்ட விசாரணையின் போது ராதிகாவின் எழுத்துபூர்வமான வாக்குமூலம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதை பார்த்த நீதிபதிகள் நாளை (திங்கட்கிழமை) மதுரை ஐகோர்ட்டில் ராதிகாவை ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக