திருமணத்திற்கு முன் உடல் நலனில் கவனம் செலுத்தும் பெண்கள் பலரும் குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் உடலில் கவனம் செலுத்துவதில்லை. கர்ப்ப காலம் தொடங்கி பிரசவம் வரை தன் உடல் நிலையையும் வயிற்றில் வளரும் குழந்தையையும், கவனமாக பார்த்துக் கொள்வது
பெண்களின் முதல் கடமை என்றால், குழந்தை பிறந்த பிறகோ அதற்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய உடம்பு வலுப்பெறுவதற்கும், முன்னை விட நன்றாக கவனித்துக்கொள்வது அவசியம்.
குழந்தைப் பெற்றுக்கொண்டபின் உடல் அமைப்பானது மாறிப்போய் விடும். எனவே சத்தான ஆகாரங்கள் உண்பதோடு அதற்கேற்ப உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நார்மல் டெலிவரி என்றால் டெலிவரியான ஒரு வாரத்திலேயே உடலானது நார்மலான நிலைக்கு வந்துவிடும் என்றாலும் பிரசவத்திற்குப் பின்பு மொத்த உடல்நிலையும் ஓய்ந்துதான் இருக்கும் என்பதால், முதலில் உணவில்தான் கவனம் கொடுக்க வேண்டும்.
பிரசவத்தின்பொழுது இழந்த சக்தியைத் திரும்பப் பெற புரோட்டீன், கார்போஹைட்ரேட், விட்டமின்கள் கலந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். சைவம் மட்டுமே என்றால் பழங்கள், கீரைகள், காய்கறிகள், பருப்புவகைகள் சாப்பிடலாம். நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம் சாப்பிடவேண்டும். அதேசமயம் அசைவம் சாப்பிடுபவர் என்றால் மீன், முட்டை, ஈரல் சாப்பிடலாம்.
ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தாய்ப்பால் அதிகம் சுரக்க நிறையப் பால் குடிக்க வேண்டும். தாய்ப்பாலானது குழந்தைக்கு கட்டாயம் ஒரு வருடமாவது தர வேண்டும். இது குழந்தைக்கு மட்டுமல்ல தாயின் உடல் நலனுக்கும், சீக்கிரம் கருத்தரிக்காமல் இருக்கவும் உதவும். குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது சாப்பிட்ட இரும்புச்சத்து, கால்சியம் மாத்திரைகளை தாய்ப்பால் நிறுத்தியபின் 6 மாதங்கள் வரை சாப்பிட வேண்டும்.
சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் அடுத்த குழந்தைக்கு குறைந்த பட்சம் மூன்று வருடங்களாவது தள்ளிப்போடுங்கள். ஏனெனில் அடுத்தடுத்து குழந்தை பெற்றுக்கொண்டால் உடம்பில் உள்ள புரோட்டீன் சத்து எல்லாம் கரைந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுவதோடு, ரத்தசோகை ஏற்படும். தாய்ப்பால் கொடுத்துக்கொண்டு இருக்கும் போது கர்ப்பம் தரிக்காது என்றாலும் விதி விலக்குகளும் உண்டு. எனவே உறவில் கவனம் தேவை.
பிரசவமான பெண்கள் உள் ஆரோக்கியத்தை மட்டும் பார்க்காமல் வெளி ஆரோக்கியத்தையும் கவனிக்கவேண்டும். உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக சிக்கென்று வைக்க வேண்டும். உடற்பயிற்சிகள் செய்தால்தான் ஹெர்னியா, கர்ப்பப்பை சரிதல் போன்ற பிரச்னைகளைத் தடுக்க முடியும். அதிகமாக வெயிட் தூக்கக் கூடாது. ஒரேடியாக ஓய்வெடுத்தாலும் உடம்பு குண்டாகிவிடும் எனவே நிறைய நடக்கவேண்டும்.
நார்மல் டெலிவரி எனில், சில வாரங்களிலேயே வயிற்றுத் தசைகள், இடுப்புத் தசைகள் சுருங்கப் பயிற்சிகள் செய்ய வேண்டும். உடனடியாக அந்தப் பயிற்சிகளை செய்தால்தான் வயதானாலும் பிறப்புறுப்பின் தசைகள் வலுவாக காணப்படும். சிசேரியன் எனில் இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் உடலானது இயல்பு நிலையை அடையும். அதன்பின் பயிற்சிகளை செய்யலாம். எந்த பிரசவமாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனைப்படிதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
0 கருத்து:
கருத்துரையிடுக