இறந்து போய் விட்ட தனது கணவரின் உடலுடன் 5 நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து, சமைத்துச் சாப்பிட்டும், டிவி பார்த்தபடியும் இருந்துள்ளார் ஒரு பரிதாபத்துக்குரிய பெண்.திருச்சி மாவட்டம் பூவாளூரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி அய்யர். 70 வயதான இவர் பெங்களூரில் மெரைன் என்ஜீயராக வேலை பார்த்தார். ராமமூர்த்தியின் முதல்
மனைவிக்கு ஒரு மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் மகனுடன் சென்னையில் வசிக்கிறார்.
ராமமூர்த்தி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பானுமதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ராமமூர்த்தி பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூர் அக்ரஹாரத்தில் பானுமதியுடன் குடியிருந்து வந்தார். இவர்களுக்கு குழந்தை கிடையாது.
ராமமூர்த்தி அக்கம்பக்கத்தினரிடம் பேசி பழகுவதில்லை. பானுமதியையும் எங்கும் வெளியில் அனுப்புவதில்லை. உறவினர்கள் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் போவதில்லை.
பானுமதி எப்போதாவது பெங்களூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு சென்று வருவார். பானுமதி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
பத்து நாட்களுக்கு முன்பு ராமமூர்த்தி வீட்டுக்குள் தவறி விழுந்து மயங்கி விட்டார். ஆனால் பானுமதிக்கு அது தெரியவில்லை. தனது கணவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்து பேசாமல் இருந்துள்ளார். தலையில் காயமடைந்து மயக்க நிலையில் இருந்த ராமமூர்த்தி 5 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது.
ஆனால் பானுமதி இதை அறியாமல் வழக்கம் போல இருந்துள்ளார். சமைப்பதும், சாப்பிடுவதும், டிவி பார்ப்பதுமாக இருந்துள்ளார். இந்த நிலையில் ராமமூர்த்தியின் உடலிலிருந்து துர்நாற்றம் கிளம்பியது. இது அக்ரஹாரம் முழுவதும் பரவி அங்குள்ளவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வீட்டு ஹாலில் ராமமூர்த்தியின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததையும், அதை அறியாமல் பானுமதி இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பானுமதியிடம் விசாரித்தபோது அவருக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. மலங்க மலங்க விழித்தபடி இருந்தார். கணவர் பெயரைக் கூட சொல்லத் தெரியாத அளவுக்கு அவரது மன நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
0 கருத்து:
கருத்துரையிடுக