ஒடிசா மாநிலத்தில் மனைவியுடன் சண்டை போட்டு மனமுடைந்த ஒருவர் தற்கொலை செய்வதற்காக சிங்கத்தின் வேலிக்குள் பாய்ந்தார். சிங்கங்கள் அவரை கடித்துக் குதறியதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கஞ்சம் மாவட்டம், சத்ரபூரைச் சேர்ந்தவர், சூரிய நாராயண்தாஸ். (வயது 45). கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் நந்தன்கானன் உயிரியல் பூங்காவிற்குச் சென்றார். சிங்கங்கள் இருந்த பகுதிக்குள் சென்ற அவர் தனது உடைகளை களைந்துவிட்டு, உள்ளாடையுடன் திடீரென்று திடீரென குதித்துவிட்டார். அப்போது அந்த இடத்தில் இருந்த 2 சிங்கங்கள் அவரை கழுத்தில் கவ்வியபடி 50 அடி தூரம் இழுத்துச்சென்றது. அவருடைய உடலின் பல்வேறு இடங்களில் சிங்கங்கள் கடித்து குதறின.
சுற்றுலா பயணிகள் கூச்சல்
இந்த கொடூர காட்சியை பார்த்த சுற்றுலா பயணிகள் அந்த பகுதிக்குத் திரண்டு வந்து கூச்சல் போட்டனர். இதனால் மிரண்டு போன சிங்கங்கள் மக்களின் கூச்சலால் மிரண்டு போய், உறைவிடத்தின் மறைவான பகுதிக்குச் சென்று மறைந்து கொண்டன. அதற்குள் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று, படுகாயத்துடன் கிடந்த தாஸை மீட்டு புவனேஸ்வரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருடைய உடல் நிலை மோசம் அடைந்ததால், தீவிர சிகிச்சைக்காக அவர், எஸ்.சி.பி. மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். உயிருக்குப் போராடி வரும் தாஸுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலைக்கு காரணம்
முன்னதாக ஆஸ்பத்திரியில் நினைவு திரும்பியவுடன் தாஸிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாகவும், துர்க்கையின் வாகனமான சிங்கங்களுக்கு உணவாகி சாக விரும்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
மனைவி கூட மல்லுக்கட்டுவதை விட சிங்கங்களுக்கு இரையாவதே மேல் என்று நினைத்து மனோதைரியத்துடன் பாய்ந்தவர் கடைசியில் படுகாயங்களுடன் தப்பிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக