புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் குன்னூர் சந்திராகாலனியை சேர்ந்தவர் ரமேஷ்(45). டைல்ஸ் வியாபாரி. இவரது மனைவி அஜந்தா(35). இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.


கடந்த 15ம் தேதி ரமேஷ் வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். குன்னூர் டவுன் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரித்தனர். ரமேசின் கழுத்தில் காயம் இருந்ததால், அவரது தந்தை மாரண்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தனிப்படையினர் விசாரணையில், அஜந்தாவுக்கும், இன்னொரு நபருக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அஜந்தாவிடம் தீவிர விசாரணை நடத்தியதில், கள்ளக்காதலன் மூலம் கணவனை தீர்த்துக்கட்டியதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் அஜந்தா அளித்த வாக்குமூலம்:

எனக்கும், சின்னசாமி என்கிற முத்துசாமிக்கும்(34) பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்திப்போம். முத்துசாமியுடன் பழகுவதை எனது தாயும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இது எனது கணவருக்கு தெரிந்துவிட்டது. அவர் என்னை கண்டித்தார். இனிமேல் நினைத்த நேரத்தில் சந்திக்க முடியாது என்பதால் கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். இதற்கு எனது அம்மாவும் உடந்தையாக இருந்தார்.

கடந்த 15ம்தேதி நானும், அம்மாவும் வெளியில் சென்று விட்டோம். அப்போது முத்துசாமி, அவரது நண்பர்கள் சேட் என்ற முபாரக்(36), ரவி(35) ஆகியோர் வந்து, வீட்டில் தனியாக இருந்த எனது கணவரை கழுத்தில் மிதித்தும், இறுக்கியும் கொலை செய்தனர். அவர்கள் சென்றபின், நானும் அம்மாவும் வீட்டுக்குவந்து எதுவும் தெரியாததுபோல், கணவர் இறந்துவிட்டதாக கூறி அழுதோம்.

ஆனால் போலீசார் பிடித்துவிட்டனர். இவ்வாறு அஜந்தா வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அஜந்தாவின் தாய் ராஜம்மாள், கள்ளக்காதலன் முத்துசாமி, அவரது நண்பர்கள் முபாரக், ரவி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். 5 பேரும் குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top