பராக் ஒபாமா, இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக அதிபராகியிருக்கும் 13வது தலைவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் 44வது அதிபராக அவர் வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி பொறுப்பேற்கிறார்.
அமெரிக்காவின் முதல் கறுப்பு இன அதிபரான ஒபாமா, தான் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தேவையான 270 வாக்குகளை விட கூடுதலான வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியைத் தோற்கடித்திருக்கிறார்.
அமெரிக்கப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வந்த போதிலும், மிட் ரோம்னி கடுமையான போட்டியை ஏற்படுத்திய நேரத்திலும் ஒபாமா வெற்றி பெற்றிருக்கிறார்.
ஃபுளோரிடா மாகாண வாக்குகள் இன்னும் முடிவாகாத நிலையில், ஒபாமா 303 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மிட் ரோம்னி 206 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இந்த வெற்றியை அடுத்து, ஒபாமா மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அதிபர் பதவியில் நீடிப்பார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வாக்குகள் எண்ணும் பணிகள் துவங்கின.
அமெரிக்க செனட் சபையில், ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், குடியரசுக் கட்சி அமெரிக்க காங்கிரஸ் சபையில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
ரோம்னியின் ஆதரவும் எனக்குத் தேவை! ஒபாமா வெற்றி உரை!
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமா சிகாகோவில் வெற்றி உரை நிகழ்த்தினார்.
அதில், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு, ஒபாமா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், நாம் ஒன்றாக இணைந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக பணியாற்றுவோம். அதன்படி, முன்னேற்றமான பாதையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செல்வோம். சாதாரண மக்களும் எந்தவொரு உயர் பதவிக்கும் வரலாம்.
வரும் காலங்களில் அமெரிக்காவுக்கு சிறப்பான மாற்றங்கள் காத்திருக்கின்றன. இந்த முறை போட்டி கடுமையாக இருந்தது. ஆனால், நாட்டு மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைய உதவி செய்தீர்கள். எனக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட குழு, மிகக் வலிமையான பிரச்சாரத்தை மேற்கொண்டது. அவர்களுக்கும் எனது நன்றிகள்.
ரோம்னி வாழ்த்து
மீண்டும் வெற்றி பெற்றுள்ள ஒபாமாவுக்கு, மிட் ரோம்னி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில், அரசியல் மோதல்களுக்கு இடம் கொடுக்காமல், மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்பட வேண்டியது அவசியம் என்று மிட் ரோம்னி தெரிவித்தார்.
'நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், நாட்டை வேறு திசையில் கொண்டு சென்றிருப்பேன். ஆனால், மக்கள் வேறு தலைவரைத் தேர்ந்தெடுத்திருப்பதால், நானும் அவர்களுடன் சேர்ந்து அவருக்காகவும் இந்த நாட்டுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்’ என்றார் மிட் ரோம்னி.
உலகத் தலைவர்கள் வாழ்த்து
மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமாவுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் அதிக நாட்கள் அதிபரானவர்கள்
அமெரிக்க வரலாற்றில் அதிக நாட்கள் அதிபராக இருந்தவர் ப்ராங்ளின் ரூஸ்வெல்ட். மூன்று முறை, அதாவது 12 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தவர், நான்காம் முறையும் அதிபராகி 83 நாட்களில் இறந்துவிட்டார்.
1955 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டப்படி, ஒரு தலைவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது என சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டப்படி ஒருவர் தொடர்ந்து இரு தடவை அதிபராக இருக்கலாம். அடுத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் போட்டியிடலாம்
உதாரணத்திற்கு, சட்டப்படி பில் க்ளிண்டன் அடுத்து வரும் 2016ல் போட்டியிடலாம். ஆனால் நடைமுறைப்படி அவர் போட்டியிட மாட்டார். கட்சியும் பெரும்பாலும் அனுமதிக்காது.
இரு முறை அதிபரானவர்கள் பட்டியல் இது.
1. தாமஸ் ஜெபர்சன்
2.ஜார்ஜ் வாஷிங்டன்
3.ஜேம்ஸ் மேடிசன்
4.ஜோம்ஸ் மன்ரோ
5.ஆன்ட்ரூ ஜாக்ஸன்
6.யுலிசஸ் கிரான்ட்
7.குரோவர் க்ளீவ்லாண்ட்
8.வுட்ரோ வில்சன்
9.ட்வைட் ஐஷ்னோவர்
10.ரொனால்ட் ரீகன்
11.பில் க்ளின்டன்
12.ஜார்ஜ் புஷ்
13.பராக் ஒபாமா (தற்போது)
இவர்களில் குரோவர் க்ளீவ்லாண்ட் தொடர்ந்து இருமுறை பதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜெயித்து வந்தார்.
அதிபர்கள் இறந்து அல்லது பதவி விலகிய நேரத்தில் மீதிக் காலத்துக்கு அதிபராக தேர்வு செய்யப்பட்டு (தேர்தல் நடத்தாமல்) , அடுத்த முறை பதவிக்கு வந்தவர்கள் 8 அதிபர்கள். அவர்கள் இந்தப் பட்டியலில் சேர மாட்டார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக