ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கதாநாயகனாக தற்போது பேசப்பட்டுக் கொண்டு இருப்பவர் கசுன் என்கிற மாணவன். இவர் பிறப்பில் இருந்து மாற்றுத் திறனாளி. இவரால் எழுந்து நிற்க முடியாது. அம்மாதான் தினமும் இவரை தூக்கிக் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு கொண்டு வந்து பின் கூட்டிச் செல்கின்றார். ஆனால் கசுன் படிப்பில்
ரொம்பவே கெட்டிக்காரன்.
இவரது சொந்த இடம் மாத்தறை. குடும்பத்தில் முதல் பிள்ளை. 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். பிறந்தபோது இவரின் உடல் நிலை மிகவும் பலவீனமாக இருந்தது. உறுப்புக்கள் முழுமையான முறையில் உருப் பெற்று இருக்கவில்லை. குறிப்பாக அங்கங்கங்களை சுயமாக அசைக்க முடியவில்லை. பெற்றோர் கொழும்புக்கு கொண்டு வந்து துறை சார்ந்த வைத்திய நிபுணர்களிடம் காண்பித்தும் உள்ளனர். பிசியோதெரபி என்று சொல்லப்படுகின்ற உடல் பயிற்சி சிகிச்சை மூலம் கழுத்துப் போன்ற உறுப்புக்களை அசைக்கின்ற அளவுக்கு முன்னேற்றம் பெற்றார். ஆனால் எழுந்து நிற்க முடியவே இல்லை.
ஆயினும் இவர் சிறுவயதில் இருந்தே ரொம்பப் புத்திசாலி. தரம் - 1 முதல் தரம் - 7 வரை தம்பெல கனிஷ்ட பாடசாக்லையில் பயின்றார். பின் மாத்தறை ராகுல கல்லூரியில் சேர்க்கப்பட்டு க. பொ. த உயர் தரம் வரை படித்தார். அம்மாதான் இவரை சுமந்து கொண்டு தினமும் பாடசாலைக்கு கொண்டு செல்வார்.
இவர் வர்த்தக பிரிவில் க. பொ. த உயர்தர பரீட்சை எழுதினார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அனுமதிக்கான நுழைவுப் பரீட்சையில் அதிசிறந்ந்த புள்ளிகளைப் பெற்றார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு இவர் தெரிவானமையைத் தொடர்ந்து இவரும், அம்மாவும் பல்கலைக்கழகத்துக்கு அருகில் சிறிய அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார்கள். இவரது அம்மாதான் இவரை தூக்கிக் கொண்டு பல்கலைக்கழகம் செல்வார். திரும்பவும் அறைக்கு கூட்டிக் கொண்டு வருவார். கசுனின் அம்மா எந்நேரமும் பல்கலைக்கழகத்துக்கு வந்து, செல்கின்றமைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. அத்துடன் விரிவுரையாளர்கள், சக மாணவர்கள் இவருக்கு எப்போதும் உதவி, ஒத்தாசையாக இருந்து வருகின்றார்கள்.
கசுன் வறியப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். தகப்பன் ருகுணு பல்கலைக்கழகத்தில் சாரதியாக வேலை பார்த்து வந்தவர். தற்போது கசுனுக்காக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு மாற்றம் பெற்று வந்து உள்ளார். மூவரும் தங்குகின்றமைக்கு அறை போதாது. எனவே பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆசனம் ஒன்றில் இவர் இரவில் தூங்குகின்றமை வழக்கம்.
கசுனை தவிர இரண்டு பிள்ளைகள். இவர்களும் படிப்பில் படுகெட்டிக்காரர்கள். ஒருவர் மாத்தறை ராகுல கல்லூரியில் கணிதப் பிரிவில் உயர்தரம் பயில்கின்றார். இவரை அப்பப்பாவும், அப்பம்மாவும்தான் பராமரித்து வருகின்றனர். மற்றவர் கொழும்பு றோயல் கல்லூரியில் தரம் 09 இல் பயில்கின்றார். பாடசாலை விடுதியில் தங்கி இருக்கின்றார். தகப்பனின் மாத வருமானம் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கே போதாது. இருந்தாலும் பிள்ளைகள் மூவரையும் நன்றாக படிக்க வைத்து, உயர் பதவிகளில் அமர்த்த வேண்டும் என்கிற இலட்சியத்துக்கு எத்தனையோ தியாகங்களை கசுனின் பெற்றோர் மேற்கொண்டு வருகின்றனர்.
கசுனை பொறுத்த வரை எழுந்து நிற்க முடியாது, நடக்க முடியாது என்பதை தவிர உடல் ரீதியான வேறு பிரச்சினைகள் தற்போது இல்லை. பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார் என்று அறிந்தபோது இவரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்கவில்லை. வங்கியாளராக வர வேண்டும் என்று முன்பு ஆசைப்பட்டார். பல்கலைக்கழக விரிவுரையாளராக வர வேண்டும் என்பதில் தற்போது பற்றுறுதியாக உள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக