சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா என்ன ருசி என்ற சமையல் கலை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி வந்த பிரபல சமையல் கலை நிபுணர் ஜேக்கப் என்கிற ஜேக்கப் சகாயகுமார் திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
மறைந்த ஜேக்கப்புக்கு வயது 38தான் ஆகிறது. சன் டிவி மூலம் பிரபலமடைந்தவர் ஜேக்கப். இவரது சமையல் கலை நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிகளை விட வித்தியாசமாக இருந்ததால் குறுகிய காலத்திலேயே பிரபலமானது. சமையல் செய்வதை கிச்சனோடு நிறுத்தாமல் வெளியிடங்களுக்கும் கொண்டு சென்று ஏரிக்கரையில் சமைப்பது, குளத்தின் நடுவே சமைப்பது, அருவிக்குக் கீழே சமைப்பது என வித்தியாசப்படுத்தினார் ஜேக்கப்.
2010ம் ஆண்டு இவர் தொடர்ந்து 24 மணி நேரம் 485 விதமான உணவுகளைத் தயாரித்து கின்னஸ் சாதனையும் படைத்தார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சொந்த ஊராகக் கொண்ட ஜேக்கப் சென்னையில் வசித்து வந்தார். அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்து போனார் ஜேக்கப்.
ஜேக்கப்புக்கு இன்னும் திருமணமாகவில்லை.
0 கருத்து:
கருத்துரையிடுக