இலங்கை கிரிக்கெட் வீரரான ரங்கன ஹேரத் வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக வதந்தி
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக ட்விட்டர் சமூக வலையமைப்பில் வதந்தியொன்று வெளியாகியுள்ளது. இதனால், கிரிக்கெட்
ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவரும் இலங்கை அணிக்கும், அவுஸ்ரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் ரங்கன ஹேரத் இலங்கை அணி சார்பில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
'சிட்னி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரங்கன ஹேரத் உயிரிழந்ததாகவும் இலங்கையின் முன்னாள் பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் காயமடைந்துள்ளார்' என்று மேற்படி ட்விட்டர் சமூக வலையமைப்பில் செய்தி வெளியானது.
இந்த செய்தியைத் தொடர்ந்து ரங்கன ஹேரத்தின் மரணத்துக்கு ரசிகர்கள் அனுதாபம் தெரிவிக்கத் தொடங்கியதுடன் அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் வார்த்தைகளை கூறத் தொடங்கினர்.
இந்த வதந்திக்கு மத்தியில் இன்றைய போட்டியில் கலந்துகொண்ட ரங்கன ஹேரத், 95 ஓட்டங்களுக்கு நான்கு விக்கட்களை எடுத்ததுடன் துடுப்பெடுத்தாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 7 ஓட்டங்களைப் பெற்றார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன, 'இன்று நாம் காலை உணவு உட்கொண்டிருந்த போது மேற்படி செய்தி தொடர்பில் கேள்வியுற்றோம். இருப்பினும், இந்த செய்தியை நாம் கேள்வியுறும் போது ரங்கன ஹேரத் எம் அருகில் இருந்தார்' என புன்னகையுடன் கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக