லிபியாவில் அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது புரட்சியாளர்களின் இடைக் கால அரசு பதவி ஏற்றுள்ளது.
ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கடாபியின் மனைவி, மகள் மற்றும் மகன்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர். ஆனால் கடாபி மட்டும் லிபியாவை விட்டு
செல்லாமல் தலைமறைவாகியுள்ளார்.
அங்கிருந்தபடியே தனது ராணுவத்தை இயக்கி வருகிறார். அவர்கள் கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகரை தக்க வைத்து கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே கடாபியையும், அவரது ஆதரவாளர்களையும் தேடும் பணியில் புரட்சிப்படை தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் கடாபியின் முக்கிய செய்தி தொடர்பாளர் மூசா இப்ராகிம் சிர்த் நகரின் புறநகர் பகுதியில் மாறுவேடத்தில் சுற்றி திரிவதாக புரட்சிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அவரை தேடும் பணி நடந்தது. அவர் சிர்த் புறநகரில் காரில் சென்றபோது கைது செய்யப்பட்டார்.
அப்போது அவர் பெண் வேடம் அணிந்து இருந்தார். பர்தா அணிந்து இருந்த அவர் முகத்தை துணியால் மூடி இருந்தார். இந்த தகவலை மாற்று அரசின் கமாண்டர் முஸ்தபா பின் டார்டெப் தெரிவித்தார். இன்னும் ஒருவாரத்திற்குள் கடாபியின் ஆதரவாளர்கள் அனைவரும் பிடிபடுவார்கள் என உறுதி அளித்தார்.
இதற்கிடையே மூசா இப்ராகிம் கைது செய்யப்பட்ட செய்தி லிபியாவில் இருந்து ஒளிபரப்பாகும் அல்-ஹீர்ரா மிஸ்ரதா டெலி விஷனில் புகைப்படத்துடன் வெளியானது. அதில் அவர் பெண் வேடமிட்டு இருந்தார். முகம் துணியால் மறைக்கப்பட்டிருந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக