அழகு என்பது முகத்தில் மட்டுமே இருப்பதாக கருதி அதை மெருகேற்ற பல்வேறு ஒப்பனை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள்.முக அழகு தேவை தான். ஆனால் அது மட்டுமே முழு அழகாகி விடாது. அதையும் தாண்டி நம் ஆன்மாவை கவரக் கூடிய உள் அழகும் இருக்கிறது. உள் அழகு தான் நமக்குள்ளே நம்மை அழகுப்படுத்தி,
அடுத்தவர்களுக்கும் நம்மை அழகாக்கி காட்டுகிறது.
புன்சிரிப்பு: உங்கள் முகத்தில் எப்போதும் புன் சிரிப்பை தவழ விடுங்கள். அதை மிஞ்சிய அழகு மேக்அப் எதுவும் கிடையாது. பெண்களின் புன்சிரிப்பு, மலர்ந்திருக்கும் ரோஜா இதழ்களைப் போன்று மென்மையாக அனைவரையும் வசீகரிக்கக் கூடியது.
பெண்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளாலோ, வேலைப்பளுவாலோ சிரிப்பை தொலைத்துவிடக்கூடாது. அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் புன்சிரிப்பை ஒரு பயிற்சியாக முகத்திற்கு தர வேண்டும்.
நாளடைவில் அது அப்படியே முகத்தில் ஒட்டிக்கொள்ளும். சிரிப்புள்ள முகம் எப்போதும் ஒளிவீசும். மேக்அப் போடாவிட்டாலும் அந்த முகம் அழகில் ஜொலிக்கும்.
இன்சொல்: எல்லோருடைய இதயத்திற்கும் இதம் தருவது இன்சொல். இந்த குணம் உங்களிடம் இருந்தால் கோபம் உங்களிடம் வந்து குவியாது. கடுஞ்சொல் உங்களை மட்டுமல்ல, உங்களை சார்ந்தவர்களையும் தாழ்த்திவிடும். இன்சொல் உங்களை மேலும் அழகாக்கிவிடும்.
பொறுமையான பெண்கள் மற்றவர்களை எளிதில் ஈர்த்து விடுவார்கள். கடுமையான சொற்களை பேசும்போது சற்று கண்ணாடியை பாருங்கள். உங்கள் முகம் உங்களுக்கே பிடிக்காது.
பிறகு எப்படி அடுத்தவர்களுக்கு நீங்கள் அழகாகத் தெரிவீர்கள்? ஒவ்வொரு பிரச்சினையையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் உங்களிடம் இருந்தால் சோகம் அண்டாது.
அழுகையும் தோன்றாது. அடிக்கடி அழுவது, கண்களில் எப்போதும் நீரை தேக்கி வைத்துக் கொண்டு இருப்பது உங்களை அழகாகக்காட்டாது. அலங்கோலமாக காட்டி விடும்.
நேர்மையான எண்ணங்கள்: வாழ்க்கையில் நம்பிக்கை இருந்தால் எண்ணங்களில் நம்பிக்கை வரும். நம்பிக்கையான எண்ணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தந்து முகத்திற்கு அழகைத்தரும். முகமே மெருகுபெறும். நம்பிக்கையற்ற எதிர்மறை சிந்தனைகள் உங்களை சோர்வடையச் செய்து வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்கச் செய்யும்.
உடை நேர்த்தி: சரியான உடைகளை தேர்ந்தெடுத்து, அவைகளை நேர்த்தியாக அணிந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அது உங்களை மேலும் அழகாக்கும். உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற சரியான உடைகளை அணிய தெரிந்துகொள்ளுங்கள்.
நிறம், உயரம், இவற்றிற்கேற்ற உடைகளை தேர்வு செய்து அணிவதின் மூலம் நீங்கள் ஒரு முழுமையான அழகைப் பெறலாம்.
தன்னம்பிக்கை: தோல்வி எல்லோருக்கும் உண்டு. உங்களுக்கும் உண்டு. எந்த தோல்வியும் உங்களை பலவீனமாக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி பார்த்துக்கொண்டீர்கள் என்றால் உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்று அர்த்தம்.
தன்னம்பிக்கை என்பது தீபத்தை போன்றது. அது உங்கள் மனதில் தோன்றும் போது உங்கள் முகம் மட்டுமல்ல, வாழ்க்கையும் பிரகாசிக்கும். அப்போது உங்களுக்குள்ளே நீங்கள் உலக அழகி ஆகி விடுவீர்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக