திரைப்பட ரசிகர்கள் குறித்து வைக்க வேண்டிய இணையத்தளங்களில் மூவிகிராமையும் சேர்த்து கொள்ளலாம். இந்த தளமானது பல்வேறு இடங்களில் இருக்கும் தகவல்களை சேகரித்து ஒரே இடத்தில வழங்குகிறது.எந்த படத்தின் கண்ணோட்டத்தை பெற வேண்டும் என்றாலும் சரி மூவிகிராமில் அந்த படத்தின் பெயரை சமர்பித்தவுடன் அந்த படம் தொடர்பான தகவல்களை ஒரே பக்கத்தில் தருகிறது.
இதற்கு வசதியாக கூகுள் போன்ற தேடல் கட்டம் இருக்கிறது. அதில் படத்தின் பெயரை குறிப்பிட்டதுமே அந்த படத்திற்கான தகவல் பக்கம் வந்து நிற்கிறது. படம் பற்றிய சுருக்கமான அறிமுகம் மற்றும் அதன் தரவரிசை நடு நாயகமாக இடம் பெறுகிறது.
அறிமுக தகவல்கள் மற்றும் தரவரிசை இரண்டுமே திரைப்பட களஞ்சியமான ஐ.எம்.டி.பி இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அருகிலேயே திரைப்பட விமர்சனங்களுக்காக அறியப்படும் ராட்டன் டமேடோஸ் தளத்தின் விமர்சனக்குறிப்பு மற்றும் இதே போன்ற தளமான மெட்டகிரிட்டிக்கில் உள்ள தகவலும் தொகுத்தளிக்கப்படுகின்றன. கூடவே யூடியூப்பில் இருந்து வீடியோ காட்சிகளும், டிரைலர் காட்சிகளுக்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளன.
இவை எதுவுமே பெரிய விஷயம் அல்ல. திரைப்பட ரசிகர்கள் ஐ.எம்.டி.புக்கும் ராட்டன் டமேடோசுக்கும் தவறாமல் விஜயம் செய்கின்றனர். அதிலும் ஐ.எம்.டி.பி.யில் ஒரு படத்தின் ஜாதகத்தையே அலசி விடலாம்.
ராட்டம் டமேடொஸ் இணையதளத்தில் மணி மணியான விமர்சங்களை படிக்கலாம். ஆனால் ஏற்கனவே சொன்னபடி மூவிகிராம் இந்த தகவல்களை தனித்தனியே தேடி அலையும் தேவை இல்லாமல் ஒரே பக்கத்தில் அழகாக திரட்டி தருகிறது. ஒரு படத்தை பார்க்கலாமா வேண்டாமா என போகிற போக்கில் முடிவு எடுக்க விரும்பினால் மூவிகிராம் அதற்கு கைகொடுக்கிறது.
பொதுவாக எல்லா திரைப்பட தளங்களிலும் பார்க்க கூடியது போலவே சமீபத்தில் தேடப்பட்ட படங்கள் பிரபலமான படங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட எந்த படமும் மனதில் இல்லை என்றால் இந்த பட்டியலை அலசிப்பார்க்கலாம்.
அத்துடன் ரசிகர்கள் தாங்கள் பார்க்கும் பக்கத்தை அப்படியே கிளிக் செய்து டிவிட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
ஒருவிதத்தில் பார்த்தால் இந்த தளமும் வாட்ச்.லே போல தாம். திரைப்பட தேடியந்திரம் என்று சொல்லக்கூடிய வாட்ச்.லே எந்த படம் எங்கெல்லாம் இணையம் வழியே காணக்கிடைக்கிறது என்னும் விவரங்களை நெட்பிலிக்ஸ், யூடியூப் போன்ற திரைப்பட சேவை தளங்களில் இருந்து திரட்டித்தருகிறது என்றால் மூவிகிராம் திரைப்பட தரவரிசைத் தகவல்களை திரட்டித்தருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக